சென்னை:ஆந்திராவில் இருந்து, காரில் கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கோவை மாவட்டம், துடியலுாரைச் சேர்ந்தவர் ரகுராமன், 25; வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சரண்குமார், 23. இவர்கள் இருவரும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு, 2018 ஜூலையில், காரில் சென்று கொண்டிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், காரனோடை சுங்கச்சாவடி அருகே, போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் 145 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு, சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா விசாரித்து வந்தார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஏ.செல்லதுரை வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ரகுராமன், சரண்குமார் மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, இருவருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 10 லட்சம் ரூபாய் அபராதமும் வித்தும் உத்தரவிட்டார்.