சிவகாசி:இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டு பவள விழாவாக கொண்டாடப்படப்பட உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஆக.13 முதல் ஆக. 15 வரை வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதைத் தொடர்ந்து சிவகாசியில் வீடு, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் ஏற்றப்படுகின்ற தேசியக் கொடிகள், அரசு விதிமுறைப்படி 2 க்கு 3 என்ற விகிதத்தில் பல்வேறு சைஸ்களில் தயாரிக்கப்படுகிறது.
16 இஞ்ச் உயரம் 24 இஞ்ச் நீளம் முதல் 36 க்கு 54 இஞ்ச் வரை காட்டன், பாலிஸ்டரில் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர சட்டைப்பையில் குத்துகின்ற, ஒட்டுகின்ற கொடி, குழந்தைகள் ,பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அணிகின்ற வகையில் தொப்பி, பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் தோரணம், பேட்ஜ், காரில் கட்ட, ஸ்டாண்டில் வைக்க உள்ளிட்ட தேசியக் கொடிகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள காசிராஜன் கூறியதாவது: சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி தேசியக் கொடிகள் தயாரித்து வைப்பது வழக்கம். தற்சமயம் பிரதமர் மோடி வீடுகளில் தேசிய கொடி ஏற்ற கூறியுள்ளதால் அதிக ஆர்டர்கள் வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகாவுக்கும் கொடிகள் அனுப்பி வைக்கப் படுகின்றன. பத்து காசில் இருந்து ரூ.150 வரை தேசியக் கொடிகள் விற்பனைக்கு உள்ளன, என்றார்.