திருநெல்வேலி:சிவில் ஜட்ஜ் உள்ளிட்ட நீதிபதி பணியிட தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி., நடத்தும். தமிழக அரசு அதற்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சுவாமி தரிசனம்
அமைச்சர் ரகுபதி நேற்று முன்தினம் திருச்செந்துாரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.பின் திருநெல்வேலி மத்திய சிறையில் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்த தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட நீதிமன்றம் விரைவில் அமைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிவில் ஜட்ஜ் தேர்வு மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.சிவில் ஜட்ஜ் உள்ளிட்ட பல்வேறு நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வு செய்ய உயர்நீதிமன்ற நியமன குழு உள்ளது. அவர்கள்தான் டி.என்.பி.எஸ்.சி., மூலம் அதற்கான தேர்வுகளை மேற்கொள்வார்கள்.
அதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு மேற்கொள்ளும். மதுரை சிறைச்சாலை ஊழியர் குடியிருப்பு மின் திருட்டு உள்ளிட்ட ஊழல் பிரச்னைகளில் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு புழல் சிறையைப் போல தமிழகத்தில் மத்திய சிறைகளை புதிய இடங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் வருவாய்த்துறை மூலம் இதற்கான இடங்களை தேடி வருகிறோம். திருநெல்வேலி மத்திய சிறையில் 1965--66ல் கருணாநிதி சிறைவைக்கப்பட்டிருந்தார்.
வலியுறுத்தல்
எனவே அவரது நுாற்றாண்டு விழாவின் போது அவர் இருந்த அறை தொடர்பாக அடையாள சின்னத்தை ஏற்படுத்த வலியுறுத்துவோம். முதல்வர் அதற்கான அறிவிப்பு வெளியிடுவார். கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்வது தொடர்பாக கோப்புகள் தயாராக உள்ளன. கவர்னர் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.