திருத்தணி:அரசு கலைக் கல்லுாரியில் இளநிலை பட்டப்படிப்பில் நேற்று நடந்த முதல் நாள் கலந்தாய்வில், 37 மாணவர்கள் சேர்ந்தனர்.
திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில் நடப்பாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பில், மொத்தம், 686 மாணவர் சேர்க்கைக்கு 3, 555 பேர் 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டில் சான்று பெற்றவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அந்தமான வாழ் தமிழர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில் கல்லுாரி முதல்வர் பூர்ணசந்திரன் துவக்கி வைத்தார்.தொடர்ந்து, ஐந்து பேர் கொண்ட மாணவர் சேர்க்கை குழு உறுப்பினர்கள், தகுதி வாய்ந்த மாணவர்களை சான்றிதழ் சரிபார்ப்புடன் கல்லுாரியில் சேர்த்தனர்.
இதில் 37 மாணவர்கள் முதல் நாள் கலந்தாய்வில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.வரும், 8ம் தேதி 275 - 400 மதிப்பெண்கள் பெற்ற பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், கணிப்பொறி அறிவியல், கணினியின் பயன்பாடுகள் கலந்தாய்வு நடக்கும். வரும் 10ம் தேதி பி.காம்., பொது, பி.காம் சி.எஸ்., பி.பி.ஏ., ஆகிய துறையில், 275- 400 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், 12ம் தேதி பி.ஏ.தமிழ், ஆங்கிலம் போன்ற பாடப்பிரிவுகளில், 80- 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் கலந்தாய்வு நடக்கிறது.