தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: பார்லிமென்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தமிழில் பதில் அளித்தார். அதை கேட்காமல், தி.மு.க., உள்ளிட்ட தமிழக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களின் செயலால், மத்திய நிதி அமைச்சர் கூறிய உண்மையை மறைக்க முடியாது.
டவுட் தனபாலு: 'உண்மை சுடும்'னு சும்மாவா சொல்லியிருக்காங்க... அந்த சூட்டின் வேகம் தாங்காம தான், வியர்த்து விறுவிறுத்து வெளிநடப்பு செஞ்சுட்டாங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அரசியல் ரீதியாக, நம்மை யாராவது தாக்கினாலும், சொல்லுக்கு சொல், வாதத்திற்கு வாதம், பேச்சுக்கு பேச்சு என்ற அளவிலே, நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக நடந்து கொள்ள வேண்டும். பழனிசாமி அணியினர் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர் என்பதற்காக, நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.
டவுட் தனபாலு: அரசியல்ல சரவெடியா வெடிக்கணும்... அப்பதான் மாற்று கட்சியினரும், மக்களும் ஏறிட்டு பார்ப்பாங்க... பரமபத ஏணியில பழனிசாமி மேலே போனதும், நீங்க அதல பாதாளத்துல சரிஞ்சதும் ஏன்னு தெரியுமா...? அவரிடம் இருந்த வேகமும், ஆவேசமும் தங்களிடம் இல்லாதது தான் காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அகில இந்திய லோக்கோ ஓட்டும் தொழிலாளிகள் கழக தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்: 'ரயில் இன்ஜின் களில் டிரைவர்களுக்கு கழிப்பறை வசதி அமைக்க வேண்டும். இரண்டு பணியின் போது அளிக்கப்படும் இடைவெளியை வார ஓய்வாக கருதாமல், தனியாக வார ஓய்வு அளிக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்.
டவுட் தனபாலு: '5ஜி' காலத்துல, 500 - 1,000 கி.மீ.,க்கு ரயில்களை ஓட்டுற டிரைவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாதது கவலைக்குரியது... பல லட்சம் மக்களை துாங்கும் வசதியோட சொகுசா கொண்டு போய் சேர்க்கிற ரயில் டிரைவர்களுக்கு கழிப்பறை வசதி அமைக்க, ரயில்வே துறை துரிதமா நடவடிக்கை எடுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!