என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில், பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற ஆடிப்பூர திருவிழாவில் தேர் கவிழ்ந்ததில், ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.இப்போது, கோவில்களில் நடைபெறும் தேரோட்டத்தின் போது, தேர் குடை சாய்ந்து குப்புற விழுவது, சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதற்கு, கோவில் நிர்வாகத்தினரின் அலட்சியமே காரணம் என பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தேர் பவனி வரும் சாலைகள் சரியாக இருக்கின்றனவா... மின் இணைப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவா என்று அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்வதில்லை. கோவில்களில் கிடைக்கும் வருமானத்தை, எப்படி எல்லாம் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் திட்டமிடுகின்றனரே தவிர, கோவிலில் இறைவனுக்கு நடைபெறும் நித்ய பூஜைகள் சரியாக நடக்
கிறதா என்று கவலைப்படுவது இல்லை. அதேபோல, கோவில்களில் திருவிழாக்கள் நடக்கும் முன், என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டுவதில்லை. தேரோட்டம் நடைபெறும் கோவில் எனில், முன்னதாகவே தேரின் நிலைமை பற்றி ஆய்வு செய்வதில்லை; அதில், குறைபாடுகள் இருந்தால், சரிசெய்யவும் முற்படுவதில்லை. அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகள் இதுவெனில், சாலைகள் நிலைமை படுமோசம்.
எந்தச் சாலையில் எங்கு பள்ளம் தோண்டியிருப்பரோ என்று அஞ்சி தான், வாகனத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. நன்றாக இருக்கும் சாலைகளை தோண்டுவோர், அதை மீண்டும் முறையாக சரிசெய்வதில்லை. நடக்கக்கூட முடியாத அளவுக்கு மேடு,
பள்ளங்களாக்கி விடுகின்றனர். தேர்த் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விழுவதை, அரசுக்கு மட்டுமின்றி, தங்களுக்கும் அபசகுனமாகவே மக்கள் பார்ப்பர். எனவே, இது போன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் தவிர்க்க வேண்டும். அறநிலையத் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட
வேண்டும்.
தலைதுாக்க முடியாமல் போவீர்கள்... உஷார்!
கே.ஆர்.அனந்த பத்மநாபன், மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., மிகப்பெரிய ஜனநாயக கட்சி. அதன் சித்தாந்தமே, தி.மு.க., எதிர்ப்பு தான்.ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளோர் மற்றும் கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமின்றி, அனைத்து ஜாதியினரின் ஆதரவையும் பெற்ற கட்சி. பிராமணர் முதல் தலித்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஆதரிக்கும் ஒரே கட்சி. தங்களின் சித்தாந்தம் என்று சொல்லி, குறிப்பிட்ட மதத்தையோ அல்லது ஜாதிகளையோ தாக்கிப் பேசுவதும், அவர்களின் மனம் நோகும் வகையில் விமர்சிப்பதும், சில கட்சிகளின் வாடிக்கை.ஆனால், அ.தி.மு.க., அப்படியல்ல; எந்த சித்தாந்தத்தையும் எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ செய்யாது. அனைத்து ஜாதி, மத மக்களின் பண்டிகைகளுக்கும், அ.தி.மு.க., தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பர். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா இருந்த வரை இந்த நிலைமை
நீடித்தது. தற்போது, ஒற்றைத் தலைமை பிரச்னையால், பழனிசாமி - பன்னீர்செல்வம் நடத்தும் ஏட்டிக்குப் போட்டி அரசியலால், அ.தி.மு.க., ஜாதிக் கட்சியாக சுருங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கொங்கு மண்டலம் தங்கள் ஜாதியினர் அதிகம் வசிக்கும் பகுதி என பழனிசாமி நினைக்கிறார்; தென் மாவட்டங்கள் முழுதும் முக்குலத்தோர் நிறைந்த பகுதி. அதனால், தங்களுக்கு அவர்களின் ஆதரவு இருக்கிறது என பன்னீர்செல்வம் நினைக்கிறார்.
அதற்கேற்ற வகையில், சசிகலாவும், பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டும் என, 100க்கும் மேற்பட்ட முக்குலத்தோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 'கட்சியை கைப்பற்றுவதற்காக, பன்னீரும், பழனிசாமியும் ஜாதி அரசியல் நடத்துகின்றனர்; தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தருகின்றனர்' என்ற குற்றச்சாட்டும், சமீப நாட்களாக முன்வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில், பல வேற்றுமைகள் இருந்தாலும், அனைவரும் ஆதரிக்கும் கட்சியாக அ.தி.மு.க., இதுவரை இருந்தது; அதனால், மக்களின் ஏகோபித்த செல்வாக்கை பெற்றிருந்தது. அத்துடன், தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகளில் கோலோச்சி வரும் வாரிசு அரசியல், அ.தி.மு.க.,வில் இல்லை என்பதால், மக்கள் ஆதரவை அமோகமாக பெற்றிருந்தது.
தற்போது பன்னீர், பழனிசாமி இடையே நடக்கும் சண்டையால், அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கம், ஜாதிக் கட்சியாக சுருங்கி விடும் அபாயம் உருவாகி உள்ளது; இது, எதிர்காலத்தில் அக்கட்சிக்கு பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும். ஜாதிய ஆதிக்கம் அ.தி.மு.க.,வில் தலைதுாக்கி விட்டால், அந்தக் கட்சி மக்களின் ஆதரவை இழந்து, மீண்டும் தலைதுாக்க முடியாத நிலைமை உருவாகி விடும்.
எனவே, இரு அணிகளாக செயல்படும் பன்னீரும், பழனிசாமியும், ஜாதி ரீதியாக ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக, அ.தி.மு.க., நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிறுதானியசிற்றுண்டி வழங்கலாமே!
வே.பாலமுருகன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 1,545 பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 1.14 லட்சம் மாணவ - மாணவியருக்கு, இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இளம்பிஞ்சுகள் இடைநில்லாமல், பள்ளி செல்ல வழிவகை செய்யும் முதல்வரின் இந்தத் திட்டம்
வரவேற்கத்தக்கதே. இதனால், வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கும் பணிச்சுமை குறையும். காமராஜரின் மதிய உணவு திட்டம் போல, எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டம் போல, முதல்வர் ஸ்டாலினின் சிற்றுண்டி திட்டமும், வரலாற்றில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், இந்த சிற்றுண்டியில் உப்புமா, கிச்சடி என வழக்கமாக அனைவரும் உண்ணும் உணவாக இல்லாமல், ஆரோக்கியத்திற்கு ஏற்ற சிறுதானிய உணவுகளையும் வழங்க வேண்டும். அதாவது, கேழ்வரகு தோசை, கம்பு சோறு, கம்பு தோசை, குதிரைவாலி சோறு, சாமை கிச்சடி என, நாள்தோறும் சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கினால், நாளைய தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக இருக்கும்.குழந்தைகளுக்கும் இந்த உணவு பிடித்துப் போய், பள்ளிப் பருவம் முடிந்த பின்னும், வீட்டில் அவற்றை சாப்பிடுவதை தொடர்வர். சிறுதானிய உணவின் அவசியம் குறித்து அடிக்கடி விவரித்து வரும் மருத்துவர்களும், சத்துணவு திட்ட வல்லுனர்களும், இது தொடர்பாக முதல்வருக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினும் இந்த விஷயத்தில் செவி சாய்க்க வேண்டும்.