சென்னை: புற்றுநோயில் இருந்து மீண்ட சிறார்களை சந்தித்து, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டில்லியை சுற்றிப் பார்க்க வரும் படியும் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி, ஜூலை 28ம் தேதி சென்னை வந்தார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடியை, புற்றுநோயில் இருந்து மீண்ட சிறார்கள் சந்திக்க ஆர்வம் காட்டினர்.
இதை அறிந்த பிரதமர் மோடி, சிறார்களை அழைத்து பேசினார்.இதுகுறித்து, 'ரே ஆப் லைட்' அமைப்பை சேர்ந்த டாக்டர் பிரியா ராமச்சந்திரன் கூறியதாவது:எங்கள் அமைப்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள, காஞ்சி காமக்கோடி குழந்தைகள் நல மருத்துவமனையுடன் இணைந்து, ஏழை குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை வழங்கி வருகிறது. அதன்படி, தாய், தந்தை இழந்தோர், ஏழை, எளியோர் என, 210 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறோம்.
இதில், 85 சதவீதம் குழந்தைகள், புற்றுநோயில் இருந்து முழுதுமாக குணமடைந்து விடுகின்றனர். சிகிச்சைக்கான அனைத்து செலவையும், 'ரே ஆப் லைட்' அமைப்பு ஏற்கிறது. மேலும், சிகிச்சையில் இருக்கும்போது, பெற்றோர் போல் உடனிருந்து, அவர்களின் முழு சிகிச்சையும் கண்காணிப்பதால், விரைந்து குணமடைகின்றனர்.
இவ்வாறு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவற்றில் இருந்து மீள்வதை அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வாக எடுத்து செல்லும் நோக்கத்தில், பிரதமரை சந்தித்தோம். அதன்படி, புற்றுநோயில் இருந்து மீண்ட ஒன்பது சிறார்களுடன், பிரதமரை சந்தித்தோம். அவருடன், சிறார்கள் புற்றுநோய் பாதிப்பின்போது இருந்த புகைப்படத்தை காண்பித்து, அதில் பிரதமரின் கையெழுத்தை பெற்றனர்.
ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசிய பிரதமர், அவர்களது பெயரை கேட்டறிந்து, 'என்னவாக போகிறீர்கள்?' என விசாரித்தார். இதில், 12 வயதான சிறுமிக்கு புற்றுநோய் என்றதும், அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டதை, பிரதமரிடம் கூறினோம்.இதை கேட்டதும், பிரதமர் வருத்தப்பட்டார். பின், அனைத்து சிறார்களிடமும் சிரித்து பேசிய பிரதமர் மோடி, அவர்களை டில்லியை சுற்றிப் பார்க்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின், எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தனர். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும், எங்கள் நிறுவனத்தை பிரதமர் பாராட்டினார்.இவ்வாறு அவர் கூறினார்.