நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: பரந்துாரில் வேளாண் நிலங்களை அழித்து, புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால், அவசர, அவசரமாக புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன என்பதை, ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும். உங்க ஆவேசத்தை பார்த்தால், அந்தப் பகுதியில் தங்களுக்கு நிலம் இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தின் கூந்தன்குளம், வேடந்தாங்கல், வெள்ளோடை, உதயமார்த்தாண்டம் போன்ற பறவைகள் சரணாலயங்கள், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்வாழிட காப்பகம், வேம்பனுார் ஆகிய ஆறு சதுப்பு நிலங்கள், ராம்சார் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவற்றுடன் சேர்த்து, தமிழகத்தின் ராம்சார் தளங்கள் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது. பட்டியலில் சேர்த்துட்டது பெருமை தான்... அதை தக்க வைக்கவும் தொடர்ந்து அரசு பாடுபடணும்!
புள்ளியியல் துறை சார்நிலை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலர் கண்ணதாசன் பேட்டி: தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், 'பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்கள் என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை' என்று பேசியுள்ளார். மத்திய - மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு அறிவியல் பூர்வமான முறையில், புள்ளி விபரங்களை சேகரித்து வழங்குகிறோம். எங்கள் துறையின் பணிகள் பற்றி முழுமையாக தெரியாமல், நிதி அமைச்சர் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.பல நாடுகளுக்கு போயிட்டு வந்தவருக்கு தெரிஞ்சது அவ்வளவு தான் போலிருக்குது!
தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது, சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யை கடுமையாக உயர்த்தியதன் வாயிலாக, சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு, தன் பணக்கார நண்பர்கள் கொள்ளை லாபம் அடைவதற்காக, '5ஜி ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஏலத்தின் வாயிலாக கிடைத்திருக்க வேண்டிய, பல லட்சம் கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளது. இதன் வாயிலாக, பா.ஜ., அரசு செல்வந்தர்களின் நலன் காக்கும், ஏழை எளியோரை வாட்டி வதைக்கும் அரசாக செயல்படுகிறது.தங்களது ஆட்சியில் நடந்த, '2 ஜி' அலைக்கற்றை ஏலத்துல, 'முதல்ல வர்றவங்களுக்கே முன்னுரிமை' என பிள்ளையார் கோவில் சுண்டல் மாதிரி அள்ளி கொடுத்ததை யாரும் மறக்கலை!