சென்னை:விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 3 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.5 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, 'எமிரேட்ஸ்' விமானம், நேற்று முன்தினம் சென்னை வந்தது. இதில் வரும் பயணியர் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வெளியேற முயன்ற, சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாதிக் அலி ஆகியோரை, அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அவர்களது 'பேன்ட் பாக்கெட்'டில் தங்கப்பசை மற்றும் இரண்டு தங்கச் சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்து கணக்கிட்டதில், 1.38 கோடி ரூபாய் மதிப்பிலான 2.98 கிலோ தங்கம் என தெரிய வந்தது.மேலும், 8.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல, சென்னை சர்வதேச விமான முனையத்தின் வருகை பகுதி கழிப்பறை அருகே, தங்கப் பசை அடங்கிய ஆறு பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.அவற்றை மதிப்பிட்டதில், 1.63 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.52 கிலோ தங்கம் என தெரிய வந்தது.
மொத்தம், 3 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறை புலனாய்வு அதிகாரிகள், பயணியர் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர் என, சென்னை விமான நிலைய சுங்கத் துறை கமிஷனர் கே.ஆர்.உதய்பாஸ்கர் தெரிவித்துள்ளார்.