அணை, 'ஷட்டர்' சீரமைக்காததால் விவசாயிகள்...தவிப்பு!:மழை நீர் பழவேற்காடு ஏரியில் கலந்து வீண்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பொன்னேரி:பனப்பாக்கம் தடுப்பணை மற்றும் 'ஷட்டர்' சேதமடைந்து கிடப்பதால், ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, பாசன வசதி கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரும்,பழவேற்காடு ஏரியில் வீணாக கலப்பதாக, அவர்கள் வேதனை அடைகின்றனர்.பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பு ஏரியில் தேங்கும் தண்ணீரை வைத்து, 300
அணை, 'ஷட்டர்' சீரமைக்காததால் விவசாயிகள்...தவிப்பு!:மழை நீர் பழவேற்காடு ஏரியில் கலந்து வீண்

பொன்னேரி:பனப்பாக்கம் தடுப்பணை மற்றும் 'ஷட்டர்' சேதமடைந்து கிடப்பதால், ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, பாசன வசதி கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரும்,பழவேற்காடு ஏரியில் வீணாக கலப்பதாக, அவர்கள் வேதனை அடைகின்றனர்.பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பு ஏரியில் தேங்கும் தண்ணீரை வைத்து, 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
பனப்பாக்கம் ஏரியின் அருகில், 300 ஏக்கர் பரப்பில் பெரியகரும்பூர் ஏரியும் அமைந்துள்ளது. இரு ஏரிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில், பனப்பாக்கம் கிராம எல்லையில், 100 ஏக்கர் மேய்க்கால் நிலம் உள்ளது.இந்த மேய்க்கால் நிலம் தாழ்வான பகுதி என்பதால், மழைக் காலத்தில் கூடுதல் தண்ணீரை தேக்கி வைத்து, அதை பனப்பாக்கம் ஏரிக்கு எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், பனப்பாக்கம்- பெரியகரும்பூர் ஏரிகளுக்கு இடையே, 400 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் தடுப்பணையும், உபரி நீர் வெளியேற்றுவதற்காக இரண்டு ஷட்டர்களும் அமைக்கப்பட்டன.மழைக்காலத்தில் மேய்க்கால் நிலப்பகுதியில் தண்ணீர் தேங்கியதால், பனப்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து முறையாக இருந்தது.


தடுப்பணை உடைப்பு


மேற்கண்ட மேய்க்கால் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தனர். மழைக்காலத்தில் மேய்க்கால் பகுதியில் அதிகளவில் தண்ணீர் தேங்கி, ஆக்கிரமிப்பு விவசாய பகுதிகள் மூழ்கின.இந்நிலங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க, ஆக்கிரமிப்பாளர்கள் தடுப்பணையின் ஒரு பகுதியை உடைத்து, தண்ணீரை வெளியேற்றினர்.கடந்த 12 ஆண்டுகளாக மேற்கண்ட தடுப்பணை உடைப்பு சரிசெய்யப்படாமல் உள்ளது. தொடர் பராமரிப்பு இல்லாமல் ஷட்டர்களும் பழுதாகின. காலப்போக்கில் ஷட்டர்களின் இரும்பு தளவாடங்களும் மாயமாகின.


ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஷட்டர்கள் பொருத்தப்பட்டிருந்த இடங்களில், கான்கீரிட் கட்டுமானங்கள் உடைந்தும், சிதைந்தும் போயின.மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தோர், வாகன போக்குவரத்திற்காக, பனப்பாக்கம் ஏரிக்கு மழை நீர் எடுத்து வரும் கால்வாயையும் மூடி பாதை அமைத்தனர். இதனால் பனப்பாக்கம் ஏரிக்கு மழை நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இது குறித்து விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார்தெரிவித்து வந்தனர். இதையடுத்து, 2019ம் ஆண்டு, மேற்கண்ட மேய்க்கால் புறம்போக்கு நிலம் மற்றும் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டன. தற்போது அங்கு விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை.அதே சமயம், சேதமடைந்த தடுப்பணை மற்றும் ஷட்டர்கள் சீரமைக்கப்படாமல் அதே நிலையில் கிடக்கின்றன.உடைப்பு ஏற்பட்டுள்ள தடுப்பணை மற்றும் ஷட்டர் பகுதி வழியாக, மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் வெளியேறி, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் கலந்து வீணாகிறது.


விரைவில் தீர்வு


இதனால் மழைக்காலத்தில், மேய்க்கால் பகுதியில் தண்ணீரை தேக்கி வைத்து, பனப்பாக்கம் ஏரிக்கு எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.சேதமடைந்து கிடக்கும் தடுப்பணை மற்றும் ஷட்டர்களை சீரமைத்து, மழை நீரை தேக்கி, பனப்பாக்கம் ஏரிக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பெயர் வெளியிட விரும்பாத, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தடுப்பணையின் தரம் எப்படி உள்ளது என, மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளோம். ஆய்விற்கு பின், அணையை புதுப்பிப்பதா அல்லது புதிதாக கட்டுவதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


நடவடிக்கை இல்லை


பல ஆண்டு தொடர் கோரிக்கையால் தான், மேய்க்கால் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தடுப்பணையை அதிகாரிகள் சீரமைப்பர் என, மூன்று ஆண்டுகளாக காத்திருக்கிறோம். தற்போது ஏரியில் தேங்கும் சொற்ப நீரை வைத்து, ஒருபோகம் கூட விவசாயம் செய்ய முடியவில்லை. தடுப்பணை மற்றும் ஷட்டர்கள் முறையாக பராமரிக்கப் பட்டால், மேய்க்கால் பகுதியில் அதிக தண்ணீரை தேக்கி, பனப்பாக்கம் ஏரிக்கு எடுத்து செல்ல முடியும். அதன் வாயிலாக ஆண்டுக்கு இரு போகம் விவசாயம் செய்ய முடியும்.
பி.ஜி.கணபதி,
செயலர், பனப்பாக்கம் ஏரிப்பாசன சங்கம், பொன்னேரி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X