மறைமலை நகர்:சிங்கப்பெருமாள் கோவில் -- பாலுார் சாலையில், பாலப்பணி நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சிங்கப்பெருமாள் கோவில் -- பாலுார் 10 கி.மீ., உடையது. இதில், வெண்பாக்கம் -- ரெட்டிபாளையம் இடையே, மழைக்காலத்தில் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற, சிறிய தரைப்பாலம் கட்டப்பட்டது.இந்த பாலம் சேதம் அடைந்ததால், கடந்த ஆண்டு கன மழை வெள்ளப்பெருக்கு அதிகமாக ஓடியதால், ஒரு மாதம் வரை இத்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பழைய பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்டும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கினர்.பணிகள் நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் பட்டைகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டி முருகன், 48, என்பவர் கூறியதாவது: தரைப்பால பணி நடப்பது சந்தோஷம். ஆனால், பணி நடப்பது குறித்து எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் பட்டை இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் இணைப்பு சாலை என்பதால், புதிதாக வாகனங்களில் வருவோர், பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் இருப்பது தெரியாமல், வேகமாக வந்து விபத்தில் சிக்குகின்றனர்.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தில், எச்சரிக்கை பலகை மற்றும் இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.