தாம்பரம்:கிராம தேவதை கோவில் கட்ட, தனியார் நிறுவனம் இடம் கொடுப்பதாக உறுதியளித்தும், வருவாய்த் துறை அதிகாரிகள் மெத்தனத்தால், ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்க பணிகள், ஓராண்டிற்கும் மேல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் புறநகர் பகுதி வாகனங்கள், சென்னை நகருக்குள் நுழையும் இடமாக பெருங்களத்துார் உள்ளது.தொழில் வளர்ச்சி மற்றும் எண்ணிலடங்காத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால், பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருகிறது.
ஆம்னி பஸ்கள் அணிவகுப்பு
இது தவிர, கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம், ஜி.எஸ்.டி., சாலை ஆகியவற்றில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, புறநகர் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் நின்று செல்ல, பெருங்களத்துாரில் தனியாக நிறுத்தம் உருவாக்கப்பட்டது. இதனால், இரும்புலியூர் பாலம் முதல் வண்டலுார் வரை, வெளியூர் செல்லும் ஆம்னி மற்றும் அரசு பேருந்துகள் அணிவகுத்துநிற்கின்றன.
இதன் காரணமாகவும் ஜி.எஸ்.டி., சாலையில், நெரிசலுடன் சேர்த்து விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து ஆய்வு நடத்தினர்.இதில், இரும்புலியூர் பாலம் முதல் இரணியம்மன் கோவில் வரை, 2.3 கி.மீ., துாரத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்வதே நெரிசலுக்குத் தீர்வாக அமையும் என முடிவு செய்யப்பட்டது.இதற்கான பணிகள், 2018 ஜூலையில் துவங்கின. துவங்கிய சில நாட்கள் வேகமாக நடந்து வந்த பணிகள், கிராம தேவதை கோவிலுக்கான நிலம் குறித்த பிரச்னையால், பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.
கடும் எதிர்ப்பு
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:சாலை விரிவாக்க பணிக்காக, பெருங்களத்துார் எல்லையில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இரணியம்மன் கோவிலின், 1,396 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது.கோவிலை இடம் மாற்ற, அறநிலையத் துறை அதிகாரிகளிடம், கடந்த 2019 பிப்ரவரியில் கோரிக்கை விடுத்தோம்.
அவர்கள், 'புதிதாக கோவில் கட்ட, அருகிலுள்ள தனியார் நிறுவனத்திடம் இடம் கேட்டுள்ளோம். நிறுவன அதிகாரிகளிடம் பேசி இடத்தை வாங்கும் வரை, கால அவகாசம் வேண்டும்' எனக் கூறினர். அதற்காக, 70 முதல் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், இதர பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இரணியம்மன் கிராம தேவதை கோவில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது, சுற்றியுள்ள பகுதி மக்களின் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் உள்ளது.இதன் மொத்த பரப்பு, 5,291 சதுர அடி. அதில் 1,396 சதுர அடியை, நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கினால், கோவிலின் பெரும் பகுதியை இழக்க நேரிடும் என, பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தனியார் ஐ.டி., நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில், 21 சென்ட் நிலத்தை பெற்றுத் தர, அப்போதைய தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில், தனியார் நிறுவனம், கிராம மக்கள் இடையே, பல முறை பேச்சு நடத்தப்பட்டது.அதன் முடிவில், 10.4 சென்ட் இடத்தை கோவிலுக்கு தானமாக வழங்க, தனியார் நிறுவனம் ஒப்புக் கொண்டது.
இதையடுத்து, புல அளவீடு செய்யப்பட்டு, வரைபடமும் தயாரிக்கப்பட்டது.பின், தானமாக வழங்கப்படும் இடத்தை, கோவில் சார்பாக நிர்வாகக் குழு ஏற்படுத்தி, ஹிந்து சமய அறநிலையத் துறையினருடன் இணைந்து பராமரித்து வர, கோட்டாட்சியர் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது.
அழைப்பை ஏற்கவில்லை
இதற்கான ஒப்பந்த கடிதம்,2021 அக்., 10ம் தேதி, கோட்டாட்சியர் சார்பில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனால் அதன் பின், சம்பந்தப்பட்ட இடத்தை ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு, தனியார் நிறுவனம் பதிவு செய்து கொடுக்காமல் உள்ளது.வருவாய் கோட்டாட்சியர்ரவிச்சந்திரன் மாற்றப்பட்ட பின், புதிதாக வந்த வருவாய் கோட்டாட்சியர் அதற்கான பணிகளை முன்னெடுக்கவில்லை.
இதுவே, விடுபட்ட சாலை விரிவாக்க பணிகளை துவக்க முடியாததற்கு காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து, தாம்பரம்வருவாய் துறை கோட்டாட்சியர் அறிவுடை நம்பியை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேச முயன்ற போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.
சாலை விரிவாக்க பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டிற்கும் மேல், 'பீக்- ஹவர்' மற்றும் விடுமுறை நாட்களில், பெருங்களத்துார் துவங்கி வண்டலுார் வரை, வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், பெருங்களத்துார் சிக்னலில் நடக்கும், 'ஓவல்' வடிவ மேம்பாலப் பணிகள் பாதியில் நிற்பதாலும், ஜி.எஸ்.டி., சாலையில் விபத்துகள் அதிகரித்து, அடிக்கடி உயிரிழப்புகளும் நடக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனித்து, கோவில் நில பிரச்னைகளை விரைந்து முடித்து, நிறுத்தப்பட்டுள்ள சாலை விரிவாக்க பணிகளை துவக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்
மாற்று இடம் கிடைத்த பின், இரணியம்மன் கோவிலை புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்காக 50 லட்சம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு, கட்டுமான பணியின் தேவைக்கேற்ப மாறுபடும். கோவில் கட்டுமான பணியை, ஆறு மாதங்கள் முதல் ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
பழமையான கோவில் என்பதால், கட்டுமான பணிகளை முடித்து, கோவிலில் உள்ள மூலவரான இரணியம்மனுக்கு பாலாலயம் செய்து, தாய் மண்ணுடன் எடுத்து இடம் மாற்ற வேண்டும். ஆகம விதிப்படி, அனைத்து பணிகளையும் முடித்தால் மட்டுமே, தற்போது உள்ள கோவில் நிலத்தில், நெடுஞ்சாலைத் துறையின் சாலை விரிவாக்க பணிக்கான இடத்தை வழங்க முடியும்.
- ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்