மாமல்லபுரம்:கல்பாக்கம் பகுதியில் 19 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தை, முதல்வர் ஸ்டாலின், மீனவர் பயன்பாட்டிற்கு, காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் குப்பம் மற்றும் வாயலுார் உய்யாலிகுப்பம் ஆகிய மீனவ பகுதிகள், பல ஆண்டுகளாக கடலரிப்பால் பாதிக்கப்பட்டன. இதனால் மீனவர்கள், பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசிடம் வலியுறுத்தினர்.இதையடுத்து, இரண்டு பகுதிகளையும் ஒருங்கிணைத்து, வடக்கு தெற்காக, 450 மீ., நீள கடற்கரையில், ஏழு வரிசைகளில் நேர்கல் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
கரையிலிருந்து கடலை நோக்கி, குறிப்பிட்ட உயர்மட்டத்திற்கு பாறை கற்களை குவித்து, இத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.இது மட்டுமின்றி, மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக, இரண்டு பகுதிகளிலும், தலா ஒரு மீன் ஏல கூடம், வலைபின்னல் கூடம், உலர்தளம், பொது சுகாதார வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 பிப்ரவரியில் இப்பணிகளை துவக்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. இவற்றை, முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.இப்பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில், செய்யூர் வி.சி., கட்சி - எம்.எல்.ஏ., பாபு, மீன்வள உதவி இயக்குனர் சிவகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.