கால்நடை குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை செவிலிமேடில் பொதுமக்களுக்கு குழாய் வழியாக குடிநீர் விநியோகம் செய்வதற்காக நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைனில் 'ஏர் வால்வு' அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏர் வால்வில் இருந்து, வேகமாக குடிநீர் வீணாக கழிவு நீர் கால்வாயில் கலந்து வீணாகிறது.
குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளில் தாகம் தீர்க்கும் வகையில், ஏர் வால்வு அருகில் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி அமைக்க ,மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.அரிகிருஷ்ணன், காஞ்சிபுரம்.
காலி நிலத்தில் குப்பை எரிப்பு
குன்றத்துார் ஒன்றியத்தில் வரதராஜபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு பி.டி.சி., நகர் அருகே லஷ்மி நகரில் காலி நிலங்கள் உள்ளன. இங்கு, வரதராஜபுரம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகின்றன.இதனால், அப்பகுதியில் உள்ள மரங்கள் தீயில் கருகி அழிகின்றன. காற்றில் பிளாஸ்டிக் குப்பை அடித்து செல்லப்பட்டு குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. இதே நிலை நீடித்தால், இந்த பகுதி பெரிய குப்பை மேடாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும்.
- -ஆர்.பிரவீன், வரதராஜபுரம்.
சாலையோர மரம் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில் இருந்து, கவுரியம்மன்பேட்டை கூட்டு சாலை வழியாக, சிட்டியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில், சீமைக்கருவேல மரம் சாலை ஓரம் சாய்ந்துள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் சாலை ஓர மரங்களை அகற்ற வேண்டும்.
--கே.வி.மாணிக்கம், கரூர்.