டிரைவரை தாக்கியஆறு பேர் மீது வழக்கு
மப்பேடு: மப்பேடு அடுத்த கல்லம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன், 50. இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் மஹிந்திரா வேனை தவணை முறையில் எடுத்து ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் 27 ம் தேதி நரசிங்கபுரம் கிராமம் அருகே வேனை ஓட்டி வந்துள்ளார். அப்போது வேனை மறித்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் உட்பட ஆறு பேர் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த பாரஸ் சேட்டு வேனை வாங்கி வரச் சொன்னார் என தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது கார்த்திக்குடன் வந்த மற்றொரு நபர் தருமன் பாக்கெட்டில் இருந்து 20 ஆயிரத்து 500 ரூபாயை எடுத்து விட்டார். அதை திருப்பிக் கேட்ட போது தருமனை ஆறு பேரும் சேர்ந்து கட்டையால் தாக்கினர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வரவே ஆறுபேரும் தப்பிவிட்டனர். இதுகுறித்து நேற்று முன்தினம் தருமன் அளித்த புகாரில் கார்த்திக் உட்பட ஆறு பேர் மீது மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் கடம்பத்துார் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அன்னை இந்திரா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஏகாட்டூர் அம்பேத்கார் பகுதியை சேர்ந்த தியாகு , 30 என்பதும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தியாகுவை கைது செய்த கடம்பத்துார் போலீசார் அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
இரும்பு திருடிய இருவர் கைது
திருவாலங்காடு: சென்னை - - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு கம்பிகளை விற்பனைக்கு கடத்தி செல்வதாக தனிப்படை போலீஸ் எஸ்.ஐ., குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கனகம்மாசத்திரம் அடுத்த புதுாரில் அமைந்துள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி அருகே வேகமாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தில் வந்த இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து போலீசார் சோதனை செய்தனர். திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வாகனத்தில் 2 டன் இரும்பு கம்பிகளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார், 24, காளிதாஸ் 22இருவரையும் கைது செய்தனர்.
லாரி டிரைவரிடம்பணம் பறித்த இருவர் கைது
கும்மிடிப்பூண்டி: ஊத்துக்கோட்டை அருகே செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் குமார், 31. லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தில் உள்ள தனியார் பேப்பர் தொழிற்சாலைக்கு, லோடு ஏற்றி சென்றார். லாரியை தொழிற்சாலை அருகே நிறுத்தி சாப்பாடு வாங்க தேர்வாய் கிராமம் சென்றார்.
அப்போது, டூ-- வீலரில் வந்த இரு நபர்கள், டிரைவர் குமாரிடம், கத்தியை காட்டி மிரட்டி 13 ஆயிரம் ரூபாய் பறித்து சென்றனர். பாதிரிவேடு போலீசார், தேர்வாய் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார், 22, வெங்கடேசன், 28, ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.