காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா, 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 47வது ஆண்டு விழா இன்று துவங்குகிறது.
தினமும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7:00 மணிக்கு தினமும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இன்று மாலை 6:00 மணிக்கு வினை தீர்க்கும் வேதநாயகிக்கு, விநாயகர் அலங்காரம் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு பாம்பன் அருட்சித்தர் சஞ்சீவி ராஜா சுவாமிகள் விழாவை துவக்கி வைத்து அருளுரையாற்றுகிறார்.
இரண்டாம் நாள் உற்சவமான நாளை முதல், தினமும் இரவு 7:00 மணிக்கு முறையே, அன்னபூரணி, நாகாத்தம்மன், முருகப்பெருமான், ஏலக்காய், மழைமாரி, புற்றுமாரிஅம்மன், பிள்ளைகளை காக்கும் பேரரசி அலங்காரம் நடைபெறுகிறது.ஒன்பதாம் நாள் உற்சவமான 14ல், காலை 6:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலமும், பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணிப்பொங்கலும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது. நிறைவு நாளான, ஆக., 16ல் சாந்தசொரூபினி அலங்காரமும், உலகளந்தார் தங்கைக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும் நடைபெறுகிறது.