உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையுடன் கூடிய மருத்துவ காப்பீடு பாலிசி எடுக்க விரும்புவோர், கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விவரிக்கும் முதலீட்டு ஆலோசகர் க.முரளிதரன்:
இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்கள், அடிப்படை காப்பீட்டு திட்டங்களின் கீழ் வராது. இந்த நோய்களுக்கு, தீவிர நோய் காப்பீடு என்று சொல்லப்படும், 'கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ்' என்ற பாலிசி எடுக்க வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பல செலவுகள் உடையது. அதாவது, நோய் கண்டறிதல், அதற்கான மருத்துவர் கட்டணம், விலை உயர்ந்த மருந்துகள், ஆம்புலன்ஸ் கட்டணம், செவிலியர் மற்றும் அறைக் கட்டணம் போன்றவை அடங்கும்.உடல் உறுப்பு மாற்று சிகிச்சையுடன் கூடிய மருத்துவக் காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுக்கும் போது, அதற்கான அனைத்து செலவுகளுக்கும் விரிவான, 'கவரேஜ்' இருக்கிறதா, இல்லையா என்பதையும் சரிபார்க்க வேண்டும். உறுப்பு மாற்று சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன், மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்பை கண்டுபிடிக்க வேண்டும். இது, நிறைய செலவினங்களை உள்ளடக்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய செலவுகள், மாற்று அறுவை சிகிச்சைக்காக கண்டறியப்பட்ட உறுப்புக்கான செலவு என, பல செலவுகள் இருக்கும்.தீவிர கண்காணிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வழக்கமான சோதனையின் போது ஏற்படும் செலவுகள், அறுவை சிகிச்சைக்கு பின், பெறுனர் மற்றும் நன்கொடையாளர் இருவரின் நிலை கண்காணிக்கப்படுவதற்கான செலவுகள் அதிகம்.அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிக்கல்களை சரி செய்வதற்கான செலவுகள், இந்த சிக்கல்களை சரி செய்வது நீண்ட மற்றும் விலையுயர்ந்த செயல்முறையாகும். ஆகையால், தகுந்த இன்சூரன்ஸ் ஆலோசகரிடம் ஆலோசித்து, சரியான பாலிசியை தேர்ந்தெடுப்பது மட்டும் இல்லாமல், காப்பீடு பணம் கிடைப்பதற்கும் அவர் வழிகாட்டுவார்.