காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள வள்ளலாரின், சத்திய ஞானசபை சார்பில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோரை தேடிச்சென்று ஆட்டோவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
சின்ன காஞ்சிபுரத்தில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என அழைக்கப்படும் சத்திய ஞான சபை உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சத்திய ஞான சபையில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, வெள்ளிக்கிழமைதோறும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோரை, ஆட்டோவில் தேடிச்சென்று அன்னதானம் வழங்கப்படுகிறது.
சத்திய ஞான சபை நிர்வாகி ஏ.பி.ரகுராமன் கூறியதாவது:சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள சத்திய ஞான சபையில் இருந்து, ரயில்வே சாலை, பழைய, புதிய ரயில் நிலையம், சங்கர மடம் அரசு மருத்துவமனை, காமாட்சி அம்மன்.ஏகாம்பரநாதர், சந்தவெளி அம்மன் கோவில், பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆதரவற்றவர்கள் பசியாறும் வகையில், ஆட்டோவில் உணவு எடுத்து சென்று சாலையோரம் வசிப்பவர்களை தேடிச்சென்று உணவு வழங்கி வருகிறோம்.
தற்போது நிதி பற்றாக்குறை உள்ளதால், வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.விரைவில் நாள்தோறும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.அன்னதான திட்டத்திற்கு உதவ விரும்புவோர், 95974 59257, 63807 30210 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.