திருத்தணி:நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த முதன்மை செயலர் அபூர்வாவின் தாய் வீடு, திருத்தணி வருவாய் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது. தவிர, ஊராட்சி தலைவரின் வீடு உட்பட மொத்தம் 11 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சியில் வெள்ளை குட்டை 6 ஏக்கரில் அமைந்துள்ளது.வருவாய் துறையினரால் குட்டை நிலம் என வகைப் படுத்தப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து எட்டு வீடுகள், ஒரு கடை கட்டப்பட்டிருந்தன.
நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, அதே கிராமத்தைச் சேர்ந்த ரேணுகா, 45, என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020ல் வழக்கு தொடர்ந்தார்.நீர்நிலை என்பது உறுதி செய்யப்பட்டதால், ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹசரத்பேகம் தலைமையிலான வருவாய் துறையினர், ஜே.சி.பி., இயந்திரத்துடன் அங்கு சென்று, ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றினர்.
திருத்தணி தாசில்தார் வெண்ணிலா கூறியதாவது:நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுகின்றன. இதுவரை ஆக்கிரமிப்பாளருக்கு மாற்று நிலம் ஒதுக்குவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவிலும் அது தொடர்பாக குறிப்பிடப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய்
துறையின் புல எண்: 109 /7ல், குட்டையை ஆக்கிரமித்து தமிழக அரசின் முதன்மை செயலர் ஐ.ஏ.எஸ்., அபூர்வாவின் தாய் அருணோதயா, இரு வீடுகள் கட்டிஉள்ளார். இதில் 600 சதுரடி வீடு, நேற்று இடிக்கப்பட்டது. 1,100 சதுரடியுள்ள மற்றொரு வீடு, இன்று இடிக்கப்படுகிறது.
அதேபோல், தொழுதாவூர் ஊராட்சி தலைவர் அருள்முருகன் கட்டியிருந்த 1,800 சதுரடி வீடு இடிக்கப்பட்டது. தவிர, ஆறு வீடுகள், ஒரு கடை மட்டும் அரசு கட்டடங்களான ரேஷன் கடை, ஊராட்சி அலுவலகம் ஆகியவை இடிக்கப்பட்டன.
எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களை, போலீசார் அப்புறப் படுத்தினர். திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையிலான 80 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.