சென்னை,:
'நாராயணபுரம் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சென்னை கலெக்டர், நீர்வளத்துறை கண்காணிப்பு இன்ஜினியர் ஆகியோர், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.'சென்னை, பள்ளிக்கரணை பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் இருந்த நாராயணபுரம் ஏரி, பல்லாவரம் -- துரைப்பாக்கம் சாலை அமைக்கப்பட்டதாலும், ஆக்கிரமிப்புகளாலும், 45 ஏக்கராக சுருங்கிவிட்டது. ஏரியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்காததால் மோசமான நிலையில் உள்ளது' என, ௨௦௨௦, ஜூலை 2-ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து தென் மண்டலம் தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, சென்னை, மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்தன.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதிகே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:நாராயணபுரம் ஏரியின்ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துரதிருஷ்டவசமாக சென்னை கலெக்டரும், நீர்வளத் துறையும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.குடிநீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், டேங்கர் லாரிகளில் கழிவு நீர் கொண்டு செல்லப்படுவதை கண்காணிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பை தாக்கல் செய்யவில்லை.தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு சென்னை கலெக்டர், நீர்வளத்துறை பதிலளிக்கும் விதம் திருப்தி அளிக்கவில்லை. சென்னை கலெக்டரும், நீர்வளத்துறை கண்காணிப்பு இன்ஜினியரும், அடுத்த விசாரணை தேதியான ஆக., 16- க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இல்லையெனில் சொந்த நிதியில் இருந்து, அவர்கள், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.