சென்னை:குடியிருப்பு சங்கங்கள் குறைகளை சுட்டிக்காட்டியதை அடுத்து, வேளச்சேரி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவது, இன்று மாற்றப்பட்டு உள்ளது.வேளச்சேரி - பெருங்குடி இடையேயான, 2.5 கி.மீ., ரயில்வே சாலையில், 150 அடி அகல நீர்வழிபாதை உள்ளது. வேளச்சேரி, தரமணி, கல்லுக்குட்டை, பெருங்குடி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மழைநீர், இந்த நீர்வழி பாதை வழியாக சதுப்பு நிலத்தை அடையும்.ரயில்வே சாலையின், வடக்கு பகுதியில், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட, 316, 317, 656, 658 உள்ளிட்ட சர்வே எண்களில், அரசு இடங்கள் உள்ளன.நீர்வழி பாதையில் உள்ள இடத்தில், 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியதால், நீர்வழி பாதையில் மழை நீர் செல்வது தடைபடுகிறது.இது குறித்து, 2018ல், நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.இச்செய்தி அடிப்படையில், உயர் நீதிமன்றம் விசாரித்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து, அக்., 10ம் தேதி, வருவாய்த் துறை, 1.50 ஏக்கர் இடத்தை மீட்டது. அதில் இருந்த, 24 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட இடத்தை அறிக்கையாக தாக்கல் செய்து, மொத்த ஆக்கிரமிப்பையும் எடுத்ததாக, வருவாய்த்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், மீண்டும், 'சீல்' அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. கடந்த 1ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், 'நீதிமன்ற உத்தரவை, 10 நாட்களுக்குள் அமல்படுத்தாவிட்டால், தலைமை செயலர் ஆஜராக உத்தரவிட வேண்டி வரும். சம்பந்தப்பட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக, அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி, வேளச்சேரி - பெருங்குடி ரயில்வே சாலையில் உள்ள, ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். வருவாய்த்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட இடங்களை அளந்தனர். ஆக்கிரமிப்புகளை இடிக்க, போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டது. ஆனால், சர்வே எண் மாறி அளப்பதாகவும், நீதிமன்றம் சுட்டிக்காட்டிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பாரபட்சம் காட்டுவதாகவும், வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள், வருவாய்த்துறை மீது குற்றஞ்சாட்டினர்.மேலும், பிரதான ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, நீதிமன்ற உத்தரவை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.இதையடுத்து, இன்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.வேளச்சேரி ஓரளவு தப்பிக்கும்!
ஏற்கனவே, ஒரு பகுதி ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றியதாக, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதுபோல், இந்த முறையும் செயல்பட உள்ளனர். கீழ் அதிகாரிகள், ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக செயல்படுவதால், எட்டு சங்க நிர்வாகிகள் சேர்ந்து, உயர்அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். வேளச்சேரி, சோழிங்கநல்லுார் தாசில்தார் இணைந்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். அப்போது தான், வேளச்சேரி வெள்ள பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பிக்கும்.- வேளச்சேரி பகுதி நலச்சங்க நிர்வாகிகள்