சென்னை:துாத்துக்குடியில், 400 ஆண்டுகள் பழைமையான பெண் உலோகச் சிலையை, 2.30 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜ், 56. அதே மாவட்டம், இடைச்சி விளையைச் சேர்ந்தவர் குமரவேல், 32. இவர்கள், பழைமையான சிலைகளை விற்க முயற்சி செய்து வருவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.
2.30 கோடி ரூபாய்
இதையடுத்து, ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார், ஆறுமுகராஜ் மற்றும் குமரவேல் ஆகியோரின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். இவர்களிடம் சிலைகள் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிலை வியாபாரிகள் போல பேசி நம்ப வைத்தனர்.
சிலைக்கு, 2.30 கோடி ரூபாய் விலை பேசப்பட்டது.இருவரும் சிலையை, திருச்சி மாவட்டம், உறையூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்த முஸ்தபா, 32, என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும், அவர் சிலைகளை விற்கும் புரோக்கர் என்றும், போலீசாரிடம் தெரிவித்தனர்.
பின் மூவரும் சிலையை, திருச்சி மாவட்டம், கிராப்பட்டி பிரிவு சாலை பகுதிக்கு எடுத்து வருவதாக ஒப்புக் கொண்டனர்.அதன்படி, சிலையை நேற்று எடுத்து வந்தபோது, மூவரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். இவர்களிடம் இருந்து, 1 அடி உயரமுள்ள உலோகத்திலான பெண் சிலையை கைப்பற்றினர்.
தொடர் விசாரணையில், 400 ஆண்டுகள் பழைமையான இச்சிலையை, சிவகங்கை மாவட்டம், கிளாமடந்தையைச் சேர்ந்த செல்வகுமார், 48, என்பவர் கொடுத்தார். இந்த சிலையை, 2.30 கோடி ரூபாய்க்கு விற்று பிரித்துக் கொள்ளலாம் என்றதாக, போலீசாரிடம் ஆறுமுகராஜ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, செல்வகுமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவர், 'என் தந்தை நாகராஜன், குறி சொல்பவர். 13 ஆண்டுகளுக்கு முன், சிவகங்கையைச் சேர்ந்த கருவாட்டு வியாபாரி ஒருவரின் வீட்டிற்கு, என் தந்தை குறி சொல்லச் சென்றார்.
'அப்போது, அந்த வியாபாரியின் தென்னந்தோப்பில் இந்த சிலை இருந்துள்ளது. என் தந்தை வாங்கி வந்து சாமி கும்பிட்டு வந்தார். என் தந்தை இறந்த பின், சிலையை விற்க முடிவு செய்தேன்' என, கூறியுள்ளார். இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணை
ஜெயந்த் முரளி கூறியதாவது:தொல்லியல் துறை நிபுணர்களின் ஆய்வின்படி, இச்சிலை சிவகங்கை பகுதியை ஆண்ட சேதுபதி அரச வம்சத்து பெண் சிலை என, தெரிய வந்துள்ளது. இச்சிலையின் ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் அரச வம்சத்து பெண் என்பதை உறுதி செய்கிறது.
தொல்லியல் துறை மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தமிழகத்தின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள, இச்சிலை உதவியாக இருக்கும். இந்த சிலை எங்கிருந்து திருடப் பட்டது, இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து, விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.