தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே, பூண்டியில் உள்ள புஷ்பம் தன்னாட்சி கலைக் கல்லுாரியில், பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, கல்லுாரி கல்வி முன்னாள் மண்டல துணை இயக்குனர் உள்ளிட்ட நான்கு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் அருகே பூண்டியில், புஷ்பம் கலைக் கல்லுாரி, 1956 முதல் செயல்படுகிறது. இக் கல்லுாரியை, மறைந்த காங்., முன்னாள் எம்.பி.,துளசி அய்யா குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.இக்கல்லுாரியில், 2015 முதல், 2017ம் ஆண்டு வரை பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தினார்.
இதில், 'இன சுழற்சி முறையை பின்பற்றவில்லை; போலி ஜாதிச்சான்றிதழை வழங்கி இருவர் பணியில் சேர்ந்துள்ளனர்; அரசை ஏமாற்றிய கல்லுாரி நிர்வாகம், ஊதியமாக, 55 லட்சம் வழங்கியுள்ளது' என்பன போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, தஞ்சாவூர் மண்டல கல்லுாரி கல்வி முன்னாள் துணை இயக்குனர் அறிவுடைநம்பி, உதவிப் பேராசிரியர்கள் தியாகராஜன், கற்பகசுந்தரி, கல்லுாரி தாளாளரும், முன்னாள் எம்.பி.,யுமான, மறைந்த துளசி அய்யா வாண்டையார் மீது, ஜூலை, 27ல் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.