யாத்கிர்-தெலுங்கானாவில் உள்ள தர்காவுக்கு சென்று சொந்த கிராமத்துக்கு திரும்பி கொண்டிருந்தபோது, லாரி மோதியதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தின் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகுர் தாலுகா, ஹட்டி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின் ஏழு பேர், தெலுங்கானா மாநிலம், கொடங்கல் அருகில் உள்ள சித்லபள்ளியின் ஹஜரத் அப்துல் ஷா தர்காவுக்கு நேற்று முன்தினம் சென்றனர்.வழிபாட்டுக்கு பின், 'ஹூண்டாய் சான்ட்ரோ' காரில் சொந்த கிராமத்துக்கு நேற்று அதிகாலை திரும்பி கொண்டிருந்தனர்.யாத்கிர் மாவட்டம், அரகேரா அருகே வந்து கொண்டிருந்த போது, பைப்களை ஏற்றி எதிரே வந்த லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில், லாரியின் அடியில் கார் சிக்கி கொண்டது.காரில் பயணித்த முகமது வாஜித் உசேன், 40; முகமது நஜர் உசேன், 76; நுார்ஜஹான் பேகம், 70; ஹீனா பேகம், 30; இம்ரான், 22, மற்றும் 5 மாத பச்சிளம் குழந்தை உமேஜா ஆகிய ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். முகமது பாஜீல் உசேன், 7, என்ற சிறுவன் மட்டும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி ஓட்டுனர் தப்பியோடி விட்டார்.யாத்கிர் எஸ்.பி., வேதாமூர்த்தி உட்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த சிறுவன், கலபுரகி கிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விபத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குருமட்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.