பெலகாவி-பெலகாவியின், ஜாதவ் நகரில் நேற்று மதியம், சிறுத்தை தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். நகரின் மத்திய பகுதியிலேயே, சிறுத்தை புகுந்ததால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
பெலகாவியின், கனகாவி கிராமத்தை சேர்ந்த சிதராயி லட்சுமண் மிரஜ்கர், 38; கட்டுமான தொழிலாளி. பெலகாவியின், ஜாதவ் நகரில் கட்டப்படும் கட்டடத்தில் பணியாற்றுகிறார்.நேற்று மதியம் இவர், பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த சிறுத்தை, அவர் மீது பாய்ந்து கையில் பிராண்டி காயப்படுத்தியது. அவர் மருத்துவமனையில், சிகிச்சை பெறுகிறார்.இதை பார்த்து, அப்பகுதியினர் அலறி கூச்சலிட்டதால், சிறுத்தை ஓடி புதரில் மறைந்தது. இதே இடத்தில் உள்ள யசோதன் ஜாதவ் என்பவரின் வீட்டு அருகிலேயே, சிறுத்தை நடமாடுகிறது.தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், சிறுத்தையை தேடி வருகின்றனர்.நகரில் நுழையும் வன விலங்குகளை பிடிக்கும் திறன் கொண்டவர்கள், பெலகாவியில் இல்லை. எனவே கதக்கிலிருந்து, வல்லுனர் குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில், சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. கிராமத்தில் முகாமிட்டுள்ள வனத்துறை அதிகாரிகள், 'ட்ரோன்' கேமரா வழியாக, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் அங்குள்ளனர். ஜாதவ் நகரின் சுற்றுப்பகுதிகளிலும், மக்களின் நடமாட்டத்துக்கு தடை விதித்துள்ளனர்.தடுப்பு பொருத்தி, வாகனங்களின் நடமாட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. 'வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்' என, சுற்றுப்பகுதி மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கின்றனர்.இதுவரை கிராமங்களில் மட்டுமே, சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இப்போது நகரின் மத்திய பகுதியில் நடமாடுவது மக்களை பீதியில் ஆழ்த்திஉள்ளது.