பெங்களூரு,-போலி முத்திரைத்தாள் தயாரித்து நுாற்றுக்கணக்கானோரை ஏமாற்றி வந்த 11 பேரை, சி.சி.பி., சிறப்பு போலீஸ் பிரிவினர் பெங்களூரில் கைது செய்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்டி கடையில் விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.
கர்நாடகாவில் முத்திரைத்தாள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஆன்லைன் முத்திரைத்தாள் விற்பனை மட்டுமே தற்போது அமலில் உள்ளது.ஆனாலும், பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது போன்று, முத்திரைத்தாளை போலியாக தயாரித்து, விற்பனை செய்வதாக, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்படி, சி.சி.பி., சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், கே.ஜி., சாலையின் பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு சிறிய பெட்டி கடையில் போலி முத்திரைத்தாள் விற்பது தெரியவந்தது.போலி ஸ்டாம்ப்கள்அங்கு சிறப்பு பிரிவு போலீசார், திடீரென சோதனை செய்தனர். அப்போது போலீசாரே வியக்கும் வகையில், பல்வேறு ரூபாய் மதிப்பிலான 2,664 போலி முத்திரைத்தாள்கள் இருந்தன. 1990, 1995, 2002, 2009 ஆகிய ஆண்டுகளில்தயாரிக்கப்பட்டதாக போலி முத்திரைத்தாள்கள் இருந்தன.ஒவ்வொன்றையும், தலா 5,000 முதல், 8,000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளனர். ஒன்றை 5,000 ரூபாய்க்கு விற்றாலும், 2,664 தாள்களுக்கு, 1 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம்.
அவற்றை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரின்டர், பல்வேறு அரசு அலுவலக பெயர்களில் போலியாக தயாரிக்கப்பட்ட ஸ்டாம்ப்கள், மொபைல் போன்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.இதை, பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நகர கிழக்கு மண்டல கூடுதல் கமிஷனர் ரமண குப்தா நேற்று ஆய்வு செய்தார்.முக்கிய புள்ளிபின், அவர் கூறியதாவது:உறுதியான தகவலுடன் நடத்திய சோதனையில், கலர் பிரின்ட் எடுத்து போலி முத்திரைத்தாள் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக, விஸ்வநாத், 37; கார்த்திக், 30; வெங்கடேஷ், 40; ஷியாம்ராஜ், 33; சசிதர், 35; கரியப்பா, 46; ரவிசங்கர், 44; சிவசங்கரப்பா, 47; குணசேகர், 27; ராகவ், 32; கிஷோர், 38, ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.வெங்கடேஷ் தான், போலி முத்திரைத்தாள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்தவர்களில் முக்கிய புள்ளி ஆவார். முகவர்கள் மூலம், வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசி, தகவல் வெளியில் கசியாத வகையில் மோசடி செய்து வந்துள்ளனர்.
இதை பயன்படுத்தி சொத்துகளை வேறு நபர்களுக்கு மாற்றி, நீதிமன்றங்களில் தாக்கல் செய்து, தங்களுக்கு சொந்தம் என்று கூறி பணம் சம்பாதித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இப்படி, நுாற்றுக்கணக்கானோரை ஏமாற்றியுள்ளனர். யார், யாருக்கு விற்றனர் என்பது குறித்து, கைது செய்யப்பட்டோரிடம் தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.