மூணாறு:இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே புளியன்மலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.ஒரு கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் சிக்கியது. அதனை கடத்தி வந்த மலப்புரம் பிரதீஷ் 40, மூவாற்றுபுழா ஷபீரை 57, போலீசார் கைது செய்தனர்.
ஹவாலா பணம் கடத்தப்படுவதாக இடுக்கி எஸ்.பி., குரியாகோஸ்க்கு தகவல் கிடைத்தது. அவரது அறிவுறுத்தலின்படி கட்டப்பனை டி.எஸ்.பி., நிஷாத்மோன் தலைமையில் போலீசார் புளியன்மலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பிரதீஷ், ஷபீர் வந்த ஆடம்பர காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
எதுவும் சிக்காத நிலையில் சந்தேகமடைந்த போலீசார் அருகில் இருந்த வாகன சர்வீஸ் ஸ்டேஷனில் காரை சோதனையிட்டனர். கார் அடிப்பகுதி ரகசிய அறையில் ரூ.ஒரு கோடியே 2 லட்சத்து 50 ஆயிரத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அமலாக்கதுறை, வருமான வரித்துறை அதிகாரிகளும் இதுகுறித்து விசாரித்தனர். மூவாற்றுபுழா நவுஷாத்திடம் வழங்க சென்னையில் இருந்து பணம் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிந்தது.போலீசார் கூறுகையில், இடுக்கி மாவட்டத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணத்தில் இது அதிகம். இதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,' என்றனர்.