தங்கவயல்,--''பெமல் தொழிற்சாலையை தனியார் மயமாக்க கூடாதென வலியுறுத்தி, பல ஆண்டுகள் போராடியதன் பலனாக ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மகிழ்ச்சி தரும் வகையில் உறுதி அளித்துள்ளார்,'' என, பெமல் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆஞ்ச நேய ரெட்டி பெருமிதம் கொண்டார்.
தங்கவயல் பெமல் தொழிற்சங்க அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:பெமல் தொழிற்சாலை 1965 முதல் லாபமுடன் இயங்கி வருகிறது. லாபம் தரும் நிறுவனத்தை தனியார் மயமாக்க கூடாதென 2016 முதல் தொடர்ந்து போராடி வருகிறோம்.கடந்த ஆறு ஆண்டுகளில்150 போராட்டங்களை நடத்தி உள்ளோம். கோலார் மாவட்டமே ஆதரவு அளித்தது. மாவட்ட, 'பந்த்' வெற்றி பெற்றதை மாநிலமே அறியும்.பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தியதுடன் மத்திய அமைச்சராக இருந்த அனந்தகுமாரிடம் கோரிக்கை விடுத்தோம். பரிசீலிப்பதாக கூறினார்.ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பரீக்கர், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினோம். அவர்களும் பரிசீலிப்பதாக கூறினர்.24 சதவீத பங்குகள் தனியார் மயமானது; பின், 54 சதவீதமாக உயர்ந்தது.அதை மீற விடாமல் தடுக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பதில்:தங்கச் சுரங்கம் மூடப்படாது என்று உத்தரவாதத்தை மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும், மூடிவிட்டனர்.தங்கச் சுரங்கம் நலிவடைந்தகம்பெனி; பெமல் அப்படியல்ல; லாபம் தரும் நிறுவனமாகும். அதனால் தான் தனியார் மயமாக்க கூடாதென வலியுறுத்தினோம்.மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் எழுத்து மூலமாக உறுதி அளித்துள்ளாரா?பதில்: கோலார் பா.ஜ.,- எம்.பி., முனிசாமி பெமல் தொழிற்சங்க நிர்வாகிகளை, ராணுவ அமைச்சரிடம் அழைத்து சென்றார். அவர், பெமல் தொழிற்சாலை பற்றி விபரமாக தெரிந்து வைத்துள்ளார்.
லாபம் தரும் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட்டோம் என்றார்.இது தொடர்பாக, நிதித்துறை செயலருக்கு கடிதம் அனுப்புவதாக உறுதி அளித்தார். எங்களிடம் எழுத்து மூலமாக எதுவும் தரவில்லை. அவரிடம் கடிதம் கேட்பது சரியல்ல என வந்து விட்டோம்.தேர்தல் நேரத்தில் அரசியல் ஸ்டன்ட் என்று சிலர் கூறுகின்றனரே?பதில்: எங்களுக்கு அரசியல் வேண்டாம். தொழிலாளர் பிரச்னை தான் முக்கியம். தொழிலாளர் நம்பிக்கை காப்பாற்றப்படும். எங்கள் கோரிக்கை, போராட்டங்களுக்கு மீடியாக்கள் உதவியதற்காக நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.