கூடலுார்:பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று மதியம் ஒரு மணிக்கு 137.50 அடியை எட்டியதால் ரூல்கர்வ் விதிமுறைப்படி கேரளப் பகுதிக்கு வினாடிக்கு 1870 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.நேற்று மதியம் ஒரு மணிக்கு 137. 50 அடியை எட்டியது.ரூல்கர்வ் விதிமுறைப்படி ஆக. 10 வரை 137.50 அடியாக நிலை நிறுத்த வேண்டும். இதனால் அணையை ஒட்டியுள்ள 3 ஷட்டர்களில் இருந்து கேரள பகுதிக்கு வினாடிக்கு 534 கன அடி நீர் வெளியேற்றப் பட்டது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6200 கன அடி இருந்ததால் நீர்மட்டம் மேலும் உயர்ந்து 137.55 அடியை எட்டியது.இதனால் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேலும் 3 ஷட்டர்கள் (7, 8, 9) திறக்கப் பட்டது. மாலை 6:00 மணிக்கு மேலும் 4 ஷட்டர்கள் திறக்கப்பட்டு 1870 கன அடி வெளியேற்றப் பட்டது. தமிழகப் பகுதிக்கு 2166 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.ரூல்கர்வ் விதிமுறையால் அணைப்பகுதியில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தும் நீர்மட்டம் 142 அடியை தற்போது தேக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அதிகாரிகள் முகாம்
நீர்வரத்தை கேரளப் பகுதிக்கு திறக்கும் பணியில் தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
2021 அக்டோபர் 29 ல் அணையின் நீர்மட்டம் 138 அடியானதால் அணையை ஒட்டியுள்ள இரண்டு (3, 4) ஷட்டர்கள் வழியாக 517 கன அடி நீர் கேரளப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டிருந்தது.அதன்பின் தொடர்ந்து பெய்த மழையால் மேலும் ஒரு ஷட்டர் (2) திறக்கப்பட்டு 844 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது 10 ஷட்டர்கள் திறக்கப் பட்டுள்ளன.
மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 98.64 மி.மீ. மழை பெய்தது. அதிகபட்சமாக இடுக்கி தாலுகாவில் 157.2 மி.மீ. மழை பதிவானது. தாலுகா வாரியாக தேவிகுளம் 146.4, பீர்மேடு 113.4,தொடுபுழா 38.2, உடும்பன்சோலை 38 மி.மீ. மழை பெய்தது.
நேற்று மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மூணாறு உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.பீர்மேடு தாலுகாவில் கொக்கையாறு கிராம பகுதிகளில் 6, இடுக்கியில் 3, தொடுபுழா 2 என ஏழுநிவாரண முகாம்களில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
எச்சரிக்கை
முல்லைபெரியாறு அணை நேற்று திறக்கப்பட்டதால் அந்த தண்ணீர் பெரியாறு ஆற்றில் வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புதரா, ஐயப்பன் கோவில் பகுதிகள் வழியாக இடுக்கி அணையை சென்றடைகிறது. அதனால் பெரியாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது.மூணாறு - வட்டவடை ரோட்டில் குண்டளை அணை அருகில் உள்பட பல இடங்களில் மண் சரிந்தும், மரங்கள் சாய்ந்தும் போக்குவரத்து தடைபட்டது. மூணாறு தீயணைப்புதுறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.
கலெக்டர் அறிக்கை
இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் அறிக்கை: அணை நீர்மட்டம் 137.50 அடியாக உயர்ந்ததால் மூன்று ஷட்டர்கள் திறக்கப்பட்டு 534 கன அடி நீர் கேரளப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் மேலும் தண்ணீர் வெளியேற்றப்படலாம்.ஆற்றில் குளிப்பது, மீன்பிடிப்பது, செல்பி எடுப்பது கூடாது.மஞ்சுமலை கிராம நிர்வாக அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு 24 மணி நேரமும்செயல்படும் வகையில் சிறப்பு கட்டுப்பாடு பிரிவு அலுவலகம் அமைத்துள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
அமைச்சர் ஆய்வு
பெரியாறில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும். இருப்பினும் கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு கடந்து செல்லும் வல்லக்கடவு பகுதியில் நேற்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் ஆய்வு நடத்தினார். தவிர பீர்மேடு எம்.எல்.ஏ., வாழூர் சோமனும் பல பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்டார்.