ஈரோடு:நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் , 102 அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில், விநாடிக்கு, 16 ஆயிரத்து, 663 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி., கொள்ளளவும் கொண்டது.அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம், பில்லுார் அணை நிரம்பியுள்ளதால், பில்லுார் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த நீர் தொடர்சியாக பவானிசாகர் அணைக்கு வந்து சேர்ந்ததால், அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 102 அடியை எட்டியது.
தொடர்ந்து, அணை பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து பவானி ஆற்றின் மேல் மதகுகள் வழியாக, 16 ஆயிரத்து, 663 கன அடி தண்ணீர், உபரிநீராக பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.