பெங்களூரு-இரண்டு ஆண்டுகளுக்கு பின், சுதந்திர தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்துள்ள, லால்பாக் மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. நவம்பர் 1ம் தேதி புனித் ராஜ்குமாருக்கு, 'கர்நாடக ரத்னா விருது' வழங்கப்படஉள்ளது.கொரோனாவால், இரண்டு ஆண்டுகளாக பெங்களூரு லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், இந்தாண்டு சுதந்திர தினத்தை ஒட்டி, 212வது மலர் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று மலர் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.பின், அவர் கூறியதாவது:பூங்காவில், 1922 முதல் மலர் கண்காட்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் அதிக பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர். இம்முறை சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, கண்காட்சி கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. அடுத்த பத்து நாட்களில் தினமும் பார்வையாளர்கள் திரண்டு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.மறைந்த நடிகர் ராஜ்குமார், இவரது மகன் புனித் ராஜ்குமார் ஆகியோர் நினைவாக மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அதிக பார்வையாளர்கள் வருவர்.கர்நாடக உதய நாளான நவம்பர் 1ம் தேதி, புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மலர் கண்காட்சியில் 6.22 லட்சம் பல்வேறு வகையான மலர்கள் பயன்படுத்தபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக 2.50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.வார நாட்களில், 70 ரூபாயும்; வார இறுதி நாட்களில் 75 ரூபாயும் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புனித் மனைவி அஸ்வினி, சகோதரர்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், தோட்டக்கலை துறை அமைச்சர் முனிரத்னா உட்பட பலர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.