புதுடில்லி-பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
'பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும், அவர் ஏன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதற்கான விளக்கத்தையும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். 'இதை அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், பிரஜேஷ் சிங் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் விபரம்:கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளன. தங்கள் வேட்பாளர்களின் குற்ற பின்னணியை அவர்கள் வெளியிடவில்லை.
எனவே, சோனியா, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதற்காக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு இருப்ப தாக கூறிய நீதிபதிகள், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.