மதுரை:'கூரியர்' மூலம் போதைப் பொருட்கள் கடத்தியதாக பதிவான வழக்கில், மூன்று பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கீழமை நீதிமன்றம் விசாரணையை, ஐந்து மாதங்களில் முடிக்க உத்தரவிட்டது.
புதுக்கோட்டை, மேனிலைபட்டி மணிகண்டன், மேனன் மற்றும் கோவையைச் சேர்ந்த முருகேசன். இவர்கள் கூரியர் மூலம், 620 கிராம் போதைப் பொருட்களை கடத்தியதாக, மதுரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், 2021ல் வழக்கு பதிந்தனர்.மணிகண்டன் உட்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஜாமின் அனுமதிக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
மனுவை, நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், 'பறிமுதல் செய்யப் பட்ட பொருட்கள் சட்டவிரோதமானவை அல்ல; நாங்கள் குற்றவாளிகள் இல்லை' என, தெரிவிக்கப்பட்டது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் மற்றும் மேனனின் மொபைல் போன் அழைப்பு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முருகேசனின் நெருங்கிய நண்பர் மணிகண்டன். கடத்தல் பொருட்கள் இருப்பதை அறிந்தே, அதை மணிகண்டன் பெற்றுக்கொண்டார் என, அரசு தரப்பு கூறுகிறது. மனு தள்ளுபடி செய்யப் படுகிறது.கீழமை நீதிமன்றம் விசாரணையை ஐந்து மாதங்களில் முடிக்க வேண்டும். முடிக்காவிடில் மனுதாரர்கள் ஜாமின் மனு தாக்கல் செய்யலாம்.இவ்வாறு உத்தரவிட்டார்.