கடலுார்:சப் - கலெக்டர் எனக் கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக, ஐந்து பேரிடம், 45 லட்சம் ரூபாய் மோசடி செய்த, விருத்தாசலத்தை சேர்ந்த பெண், கணவருடன் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமாதவசாரதி, 34. இவருக்கு, விருத்தாசலம் பெருவரப்பூர் சுதாகர், 44, அவரது மனைவி விண்ணரசி, 42, ஆகியோர் அறிமுகமாகினர்.அரியலுார் மாவட்டத்தில் சப் - கலெக்டராக இருப்பதாகவும், தெரிந்த அதிகாரிகள் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக, ஜெயமாதவ சாரதியிடம், விண்ணரசி கூறியுள்ளார்.மேலும், 'மத்திய அரசில் உதவி இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது. பணம் கொடுத்தால் வாங்கி விடலாம்' எனவும் தெரிவித்தார்.
விண்ணரசியின் ஆசை வலையில் விழுந்த ஜெயமாதவசாரதி, அவரிடம், 11 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.அதுபோல, சிதம்பரம், கொடிப்பள்ளம் திருமுருகன், நற்கரவந்தன்குடி கண்ணபிரான், கீழமூங்கிலடி சிவகுருநாதன், குறிஞ்சிப்பாடி லட்சுமணன் என, ஐந்து பேரிடம், 45 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், சுதாகர் மற்றும் விண்ணரசியிடம் பணத்தை கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, ஜெயமாதவசாரதி, எஸ்.பி., சக்திகணேசனிடம் புகார் அளித்தார். கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை செய்தனர்.
அதில், சுதாகர், விண்ணரசி பணத்தைப் பெற்று, ஏமாற்றியது உறுதியானது. இருவரையும் கைது செய்தனர். இருவரும் சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.