மூவர் மீது வழக்கு
புவனகிரி: உடையூர் சீயப்பாடி மேலத்தெருவை சேர்ந்த கிஷோர் மற்றும் சிவராமன் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அவர்களை அதே பகுதியைச் சேர்ந்த சுஜிபாலன் சமரசம் செய்தார்.இதையடுத்து, கிஷோர், அவரது ஆதரவாளர்கள் சரவணமூர்த்தி, தர்மதுரை ஆகியோர் சுஜிபாலன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். சுஜிபாலன், அவர் தாய் அமுதா, சித்தப்பா சசிக்குமார் ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். புகாரின் பேரில், கிேஷார் உட்பட மூவர் மீது புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்தனர்.
அம்மன் நகை, உண்டியல் திருட்டு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கொண்டசமுத்திரம் பெரிய தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் கிரீல் கேட் பூட்டு நேற்று நள்ளிரவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.தகவலறிந்த சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல், அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி ஆகியன திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 5 பேர் கைது
கடலுார்: மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க, போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், கஞ்சா விற்ற திருப்பாதிரிபுலியூர் தங்கராஜ் நகர் சூர்யா, 25; பூச்சி (எ) மூர்த்தி, 23; காட்டுமன்னார்கோவில் ஜானகிராமன், 26; மணிமாறன், 22; நல்லுார் ராஜா, 35; ஆகியோரை கைது செய்தனர். 260 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.குட்கா விற்ற சிதம்பரம் திருமுருகன், 56; கருப்பசாமி, 47; கொள்ளிடம் அன்புசெல்வம், 29; காட்டுமன்னார்கோவில் சாமிநாதன், 45; வேப்பூர் ஆனந்தன், 47, உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, 350 கிராம் குட்கா பறிமுதல் செய்தனர்.
கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
புவனகிரி: ஆதிவராகநத்தம் தெற்கு தெரு பாலமுருகன்,42. கடந்த 4ம் தேதி இரவு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், ராஜ்கிரன், ராஜேந்திரன், ராஜ் ஆகியோருக்கும் இடையே முன் விரோதத்தால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நால்வரும் பாலமுருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். நால்வர் மீதும் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.