கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஏரி மற்றும் ஆற்றங்கரையில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டமாக தரம் உயர்த்தப்பட் டும் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியில், இறைச்சி விற்பனைக்கான தனி இடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த ஆடு அடிக்கும் கூடம் பல ஆண்டுகளுக்கு முன்பாக இடித்து தரைமட்டமாக மாற்றி பஸ் நிலையம் விரிவுபடுத்தப்பட்டது.அப்போது முதல் ஆடு வெட்டும் கூடம் இல்லாததால் இறைச்சி கடைக்காரர்கள் அனைத்து சாலையோரங்களில் கடைகளை திறந்துள்ளனர்.
சாலையோரத்தில் திறந்த வெளியில் ஆடுகளை வெட்டி, கழிவுகளை கால்வாய்களில் கலக்கச் செய்து, சுற்றுப்புறங்களை சீரழித்து வருகின்றனர்.கோழி இறைச்சி கடை வைத்திருப்பவர்களும் இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.மேலும், தங்கள் கடைகளில் சேகரமாகும் மாமிச கழிவுகளை மூட்டைகளாக கட்டி, ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகள் மற்றும் சாலையோரங்களில் இரவோடு இரவாக கொட்டிச் செல்கின்றனர்.
இது சில நாட்களில் மாமிசங்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதுடன், புழுக்கள் உருவாகி சுகாதார சீரகேட்டை ஏற்படுத்துகிறது. ஆறுகளில் கொட்டுவதால், நீரில் கலந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு நுகர்வோர் அமைப்புகள் சார்பில் பல முறை புகார் தெரிவித்தும் பல ஆண்டு களாக கண்டுகொள்ளப்படாமலேயே இருந்து வருகிறது.
மாவட்ட தலைநகரமாகி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் கள்ளக்குறிச்சி இன்னும் மேன்மை அடையவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளடக்கியதாக இருந்து வருவது மக்களிடையே பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.எனவே, இறைச்சி விற்பனைக்கென தனியாக அங்காடி கட்டி திறக்கப்பட வேண்டும். சாலையோ ரங்களில் உள்ள இறைச்சி கடைகள் அகற்றப்பட வேண்டும். நீர் நிலைகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.