ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாத வட்டி யாக, 8,000 ரூபாய் தருவதாக, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்திற்கு சொந்தமான, 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வேலுாரை தலைமையிடமாக, ஐ.எப்.எஸ்., என்ற 'இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ்' என்ற நிதி நிறுவனம், 2019ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. இந்நிறுவனத்திற்கு, சென்னை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கோவை என தமிழகம் முழுதும், 30க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன.
இந்நிறுவனத்திற்கு, 1,000 க்கும் மேற்பட்ட முகவர்கள் உள்ளனர்.இந்நிறுவனம் சார்பில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் வட்டியாக, 8,000 ரூபாய் தரப்படும் என, விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கோடிக்கணக்கில் முதலீடு செய்து உள்ளனர்.
முக்கிய ஆவணங்கள்
பொது மக்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை, அவரவர் வங்கி கணக்கில் வட்டி செலுத்தப் பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், வட்டியும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தை மக்கள் கேட்டுள்ளனர்; அதற்கும் சரியான பதில் இல்லை.
இதனால், ஐ.எப்.எஸ்., நிறுவனம் மோசடி செய்து விட்டதாக, சென்னை, காஞ்சிபுரம், வேலுார் என, பல்வேறு ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், வேலுார் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நேற்று சென்னை, வேலுார், அரக்கோணம், காஞ்சிபுரம் உட்பட, தமிழகம் முழுதும், ஐ.எப்.எஸ்., நிறுவனத்திற்கு சொந்தமான, 21 இடங்களில் காலை 6:30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
ஐ.எப்.எஸ்., நிறுவனத்தின் பங்குதாரர்களான லட்சுமி நாராயணசுந்தரம், ஜனார்த்தனன் ஆகியோரின் வீடு, வேலுார் மாவட்டம், காட்பாடி, வி.ஜி.ராவ் நகரில் உள்ளது. போலீசார் வருவதை அறிந்து தலைமறைவாகி விட்டனர்.வீடுகளில் சோதனை நடந்துள்ளது. சோதனையில், பொது மக்கள் முதலீடு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டுள்ளன.
முகவர் வீட்டிற்கு 'சீல்'
காஞ்சிபுரம், ராஜேஸ்வரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 40. இவர், ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன முகவர். இவர் அப்பகுதியில் இரண்டு இடங்களில் அலுவலகம் நடத்தி வருகிறார். அங்கு சோதனையிட, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்றனர்.
அந்த அலுவலகங்களில் ஆள் இல்லை. அதன்பின், சரவணனின் வீட்டிற்கு சென்றனர்; அங்கும் ஆள் இல்லை. இதையடுத்து அவரது வீட்டிற்கு 'சீல்' வைத்தனர். 'வீட்டிற்கு உரிமை கோருபவர், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்' என, 'நோட்டீஸ்' ஒட்டினர்.