உணவு தொழிலில் இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்த, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 'புட் புரோ' என்ற உணவுத் தொழில் சார்ந்த, 14வது கண்காட்சி சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் துவங்கியது.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டு உள்ளன. அதில், உணவு தொழிலுக்கு தேவையான சமையல் அறை கருவிகள், குளிர்சாதன பொருட்கள், உணவு பதப்படுத்தும் பொருட்கள், தானியங்கள் 'பேக்' செய்யும் கருவிகள் உள்ளன.வர்த்தகத்திற்கான ரசீது மிஷின், பேக்கரி, ஐஸ்கிரீம் தயாரிப்பு மூலப்பொருட்கள், சிற்றுண்டி தயாரிப்பு இயந்திரங்கள் என, பல வகை இயந்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இங்கு, உணவுப் பொருட்கள் மொத்த கொள்முதல் அரங்குகளும் இடம் பெற்றுஉள்ளன. தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், உணவு தொழிலில் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல் விளக்கமும் அளிக்கப்படுகிறது.மேலும், உணவுப் பதப் படுத்துதல், தொழில்நுட்பங்கள், பாரம்பரிய உணவு ஆகியவை குறித்த கருத்தரங்கங்களும் நடத்தப்படுகின்றன. வரும் 7ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், வர்த்தகம் செய்வோர் மட்டும் அனுமதிக்கப்படுவர்; சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.
கண்காட்சியில் புது வரவாக, ஒரே நேரத்தில் சூடான, குளிர்ந்த உணவு பொருட்களை வைக்கும் வகையில், ஸ்வீடன் நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இயந்திரம் தொழில் முனைவோரை கவர்ந்து உள்ளது.இதை, தமிழகத்தில் அறிமுகப்படுத்திய, 'புளுசிப்' நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கோபால் கூறியதாவது:ஸ்வீடன் நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான, 'ஸ்கேன் பாக்ஸ்' எனும் மிஷினில் ஒரே நேரத்தில் சூடான, குளிர்ச்சியான உணவு பொருட்களை, அதே நிலையில் வைக்க முடியும். இந்த மிஷினை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வதும் எளிது.அதில் குறைந்த பட்சம், 50 பேர் முதல் 5,000 பேருக்கான உணவை, 'ஸ்டோர்' செய்யும் வசதி உள்ளது. விலை, 1.50 லட்சம் ரூபாய் முதல், 12 லட்சம் ரூபாய் வரை உள்ளது.இவ்வாறு கூறினார்.
சப்பாத்தி, பிரட், தோசை போன்ற உணவுடன் சேர்த்து கொள்ள சர்க்கரை கலந்து செய்யப் படும் ஜாமிற்கு பதில் தேனில் தயாரிக்கப்படும் 'ஸ்பிரட்' புது வரவாக கண்காட்சியில் இடம் பெற்று உள்ளது.கேரளாவை சேர்ந்த வி.கே.எஸ்., என்ற உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனம், இதை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது, சாக்லேட், மாதுளை, பீட்ரூட், எலுமிச்சை, இஞ்சி, மாம்பழ சுவைகளில் கிடைக்கிறது.