கோவை:'மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரிந்தால், அலட்சியம் காட்டாமல், உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையை அணுக வேண்டும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பருவ மாற்றத்தால், காய்ச்சல், சளி தொந்தரவால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். கொரோனா தொற்றும் மீண்டும் வேகமாக பரவத் துவங்கியுள்ளது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலை குறித்து ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். காய்ச்சல், சளி தொந்தரவு இருப்பதாக தெரிந்தால், அலட்சியத்துடன் செயல்பட கூடாதென, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தை அணுகுவதோடு, காய்ச்சல் தன்மை அதிகரிக்கும் பட்சத்தில், விடுப்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் குடிநீர் தொட்டி, கழிவறை அமைப்புகள், சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியை சுற்றி, தொற்று பரவும் வகையில், குப்பைகள், மழைநீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். மாணவர்கள் தொடர் விடுப்பு எடுக்கும் பட்சத்தில், அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து, மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.