குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில், மாநகராட்சி ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து, நமது நாளிதழில் வந்த செய்தியை அடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற, சிட்கோ மேலாளருக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சிட்கோ பகுதியில், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான தொழிற்பேட்டைகள் தனித்தனியாக உள்ளன. குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1க்கு அருகிலுள்ள தொழிற்பேட்டை, தனியாரால் பராமரிக்கப்பட்டாலும், அங்குள்ள ரோடுகள், பல ஆண்டுகளுக்கு முன்பே, உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு, மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. ஆனால், பல ஆண்டுகளாக அந்த ரோடுகள் சீரமைக்கப்படவில்லை; விரிவாக்கம் செய்யப்படவுமில்லை.
இதை பயன்படுத்தி, அங்குள்ள பல நிறுவனங்கள், மாநகராட்சி ரோடுகளை பெருமளவில் ஆக்கிரமித்து, காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளன; பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு, பல கோடி ரூபாய் இருக்கும். இதை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.இதுதொடர்பாக, நமது நாளிதழில் நேற்று முன்தினம் படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது. சிட்கோ மேலாளரை அழைத்துப் பேசிய கலெக்டர் சமீரன், அரசு தொழிற்பேட்டைக்குள் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, உடனே அகற்ற அறிவுறுத்தியுள்ளார்.சிட்கோ கிளை மேலாளர் ஷர்மிளா கூறுகையில், ''அரசு தொழிற்பேட்டைக்குள் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.கலெக்டர் உத்தரவைத் தொடர்ந்து, 'கொசிமா' தலைவர் நல்லதம்பி, அரசு தொழிற்பேட்டைக்குள் உள்ள நிறுவனங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால், தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள, உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கு மாநகராட்சி ரோடுகளே பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகத்துக்கே கூடுதலாகஉள்ளது
-நமது நிருபர்-
.