சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கருப்பர் கோயில் விழாவில் 2018 ல் முதல் மரியாதை பெறும் பிரச்னையில் 3 பேரை கொலை செய்த வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை, ரூ.13.28 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட தனி நீதிபதி ஜி.முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.
கச்சநத்தம் கருப்பர் கோயில் விழா 2018 மே 25 நடந்தது. முதல் மரியாதையை யார் பெறுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் மே 28 இரவு 9:00 மணிக்கு ஒரு தரப்பினர் ஆயுதங்களுடன் கச்சநத்தத்தில் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களை அரிவாளால் வெட்டினர்.
இதில் சண்முகநாதன் 31, ஆறுமுகம் 65, சந்திரசேகர் 34, பலியாகினர். சுகுமாறன் 23, மலைச்சாமி 50, தனசேகரன் 32, மகேஸ்வரன் 18, தெய்வேந்திரன் 46, காயமுற்றனர். இதில் தனசேகரன் 2020 ஜன., 16 ல் இறந்தார்.
33 பேர் மீது வழக்கு பதிவு
மகேஸ்வரன் புகாரில் பழையனுார் போலீசார் கச்சநத்தம் சுமன் 23, அருண்குமார் 21, சந்திரகுமார் 47, அக்னி (எ) அக்கினிராஜ் 20, மாரநாடு ராஜேஷ்கண்ணன் 22, ஆவரங்காடு இளையராஜா 23, சுனித்குமார் 19, கருப்புராஜா (எ) முனியாண்டி சாமி 29, மைக்கேல் முனியாண்டி 30, ஒட்டக்குளத்தான் (எ)முனியாண்டி 40, ராமகிருஷ்ணன் 19, மீனாட்சி 40, செல்வி 37, கருப்பையா 29, சுரேஷ்குமார் 39, சின்னு 67, செல்லம்மாள் 65, முத்தையா 60, முத்துச்செல்வம் 20, முத்தீஸ்வரன் 25, ராமச்சந்திரன் 38, மாயசாமி 31, சுள்ளான் கருப்பையா 28, ரவி (எ) முகிலன் 23, ரவி 34, அருள்நவீன் 19, டவார்டு (எ) கார்த்திக் 19, மாத்துார் மட்டிவாயன் (எ) முத்துமணி 21, மற்றும் சிறார் 3 பேர் உட்பட 33 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய இருவர் இறந்து விட்டனர். சிறார் 3 பேர், தலைமறைவான சுள்ளான் கருப்பையா 28, ஆகிய 6 பேரை தவிர்த்து 27 பேர் மீதான விசாரணை சிவகங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடந்தது.பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர் பி.சின்னராஜாவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நியமித்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.துஷாந்த் பிரதீப்குமார் ஆஜரானார்.
வீடியோ கான்பிரன்சிங்கில் விசாரணை
வழக்கு விசாரணை ஜூலை 27 இறுதி முடிவுக்கு வந்தது. ஆக.,1ல் வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி ஜி.முத்துக்குமரன் அறிவித்தார். தண்டனை ↔தொடர்ச்சி 6ம் பக்கம்விபரம் ஆக.,3 அறிவிப்பதாக கூறி ஒத்திவைத்தார்.
ஆக., 3 சிறையில் இருந்த குற்றவாளிகளிடம் 'வீடியோ கான்பிரன்சிங்' மூலம் பேசிய நீதிபதி தண்டனை உறுதி எனக்கூறி கருத்து கேட்டபின் ஆக., 5 தண்டனை விவரம் வெளியாகும் என்றார்.
* 27 பேருக்கு ஆயுள் தண்டனை:நேற்று காலை 11:30 மணிக்கு திருச்சி சிறையில் இருந்து ரவி (எ) முகிலன் 23, மட்டும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டார். அவர் முன்னிலையில் 27 பேருக்கான தீர்ப்பை காலை 11:32 மணிக்கு நீதிபதி வாசிக்க துவங்கி மதியம் 12:05 மணிக்கு முடித்தார்.நீதிபதி தீர்ப்பில் 3 பேர் கொலை, வீடுகளை சூறையாடியது உட்பட ஒவ்வொருவர் மீதும் 10 பிரிவுகளின் கீழ் தண்டனையை பிரித்து அறிவித்தார். அதன்படி ஒரு குற்றவாளிக்கு தலா 7 ஆயுள் தண்டனை, 31 ஆண்டுகள், 3 மாத சிறை, அபராதம் ரூ.49,200 என அறிவித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
இத்தீர்ப்பை சிறையில் இருந்த மற்ற 26 பேரிடமும் 'வீடியோ கான்பிரன்சிங்' மூலமம் வாசித்தார். பின் நீதிபதி மற்றும் ஊழியர்கள், போலீசார் மதுரை சிறையில் தண்டனை நகலை வழங்கி குற்றவாளிகளிடம் கையெழுத்து பெற்றனர். எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் சிபிசாய் சவுந்தர்யன், கண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.////
நீதிபதிக்கு வந்த மர்ம தபால்சிறப்பு வழக்கறிஞர் பி.சின்னராஜா கூறியதாவது: நேற்று முன் தினம் ஜானகிராமன் என்பவர் அனுப்பிய பதிவு தபாலில் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிபதியிடம் கூறியிருப்பது அதிருப்தி அளிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போதெல்லாம் பிரச்னை செய்தனர். ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு மிரட்டல் விடுத்தார். மற்றொருவர் விசாரணை கூண்டில் ஏறி சாட்சி சொல்லக்கூடாது என நீதிபதி முன் மிரட்டினார் என்றார்.