புதுடில்லி-பிரதமர் நரேந்திர மோடியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சந்தித்துப் பேசினார்.புதுடில்லியில் நாளை, 'நிடி ஆயோக்' கூட்டம் நடக்கிறது.
இதில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டில்லிக்கு நேற்று வந்தார். இங்கு, பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் மம்தா பானர்ஜி சந்தித்தார். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது, மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட நிதி, ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க மோடியிடம் மம்தா வலியுறுத்தினார்.மேற்கு வங்க அரசுக்கு, மத்திய அரசிடம் இருந்து 1 லட்சத்து 968 கோடி ரூபாய் வரவேண்டிய நிலுவை உள்ளது என மம்தா சுட்டிக்காட்டினார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மோடி உறுதியளித்தார்.இந்நிலையில், 'பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் என்ன பேசினர் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' என, மேகாலயாவின் முன்னாள் கவர்னர் ததகதா ராய், சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
மேற்கு வங்கத்தில் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த பார்த்தா சட்டர்ஜி, ஆசிரியர் நியமனத்தில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்டர்ஜி மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 50 கோடி ரூபாய் பணம், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள், வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கடந்த மாதம் 23ல் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின், இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மீண்டும் ஆக., 18ல் விசாரணை நடக்கிறது.