வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-தங்களின் போராட்டத்தை அயோத்தி ராமர் கோவிலுடன் இணைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொச்சைப்படுத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் நாடு முழுதும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. காங்., கட்சியினர் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இதற்கு முன் பல போராட்டம் நடத்திய காங்., கறுப்புச் சட்டை அணியவில்லை. “ஆனால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய தினத்தில் நடத்திய போராட்டத்தில் கறுப்பு உடை அணிந்துள்ளனர். “விலைவாசி உயர்வு என்பது அவர்களுக்கு ஒரு மறைமுக காரணம். ராமர் கோவில் கட்டுவதில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை,”என்றார்.
அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு, காங்., கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ரமேஷ்,“காங்கிரசின் போரட்டத்தை திசை திருப்ப அமித்ஷா அதை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துஉள்ளார்,” என்றார்.