ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், காற்றுடன் பெய்து வரும் மழையால், 11 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது; நான்கு அணைகளில் முழு கொள்ளளவு நீர் நிரம்பியுள்ள நிலையில் பிற அணைகளில் நீர் மட்டம் உயர்கிறது.
நீலகிரியில், நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சியில் 200 மி.மீ., தேவாலா 181 மி.மீ., நடுவட்டம் 152 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில், நேற்று முன்தினம் இரவில் காற்றுடன் பெய்த மழையால், பைக்காரா, அப்பர் பவானி உட்பட ஒன்பது பகுதிகளில் மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதித்தது.
தலைக்குந்தாவில் மரம் விழுந்து பசு பலியானது. பகலில், 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக, 13 அணைகள், 30 தடுப்பணைகள் உள்ளன. கடந்த மூன்று நாட்கள் பெய்த மழைக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வரத்து அதிகரித்து, வினாடிக்கு, 300 கன அடி முதல் 400 கன அடி வரை நீர் வருகிறது.குந்தா, கெத்தை, மாயார், கிளன் மார்கன் அணைகள் முழு கொள்ளளவை எட்டின; இன்னும் திறக்கப்படவில்லை. பிற அணைகளில், 80 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. இதனால் குளிரும் ஊட்டியில் மக்கள் மனது மேலும் குளிர்ந்தது.