திருப்பதி,-நிர்வாண நிலையில் இளம்பெண்ணுக்கு மொபைல் போனில் 'வீடியோ கால்' செய்த ஆந்திர எம்.பி., ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்துபுரம் தொகுதியில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியின் எம்.பி.,யாக இருப்பவர் கோரன்ட்லா மாதவ், 45. இவர், சமீபத்தில் நிர்வாண நிலையில், ஒரு இளம்பெண்ணுக்கு மொபைல் போனில் வீடியோ கால் செய்து, ஆபாசமாக பேசியுள்ளார். மாதவ் பேசிய வீடியோ கால் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, தெலுங்கு தேசம் உட்பட எதிர்க்கட்சியினர், கோரன்ட்லா மாதவ் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.இதனால் முதல்-வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெகன் விசாரித்த போது, 'அந்த வீடியோ 'மார்பிங்' செய்யப்பட்டது' என கோரன்ட்லா விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். உண்மையாக இருந்தால் மாதவ் பதவி பறிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.