கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மல்லாபுரத்தில், 6 லட்சம் ரூபாய்க்கு சாராயம் விற்க ஏலம் விடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரத்தில் மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரம் கிராமம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம், ஊர் முக்கிஸ்தர்கள், மறைமுகமாக சாராயம் ஏலம் நடத்தினர். இதில், 3 லட்சம் ரூபாய் துவங்கி, 6 லட்சம் ரூபாய் வரை ஏலம் போனது.ஏலத்தை பாப்பாத்திமூலையைச் சேர்ந்த ஒருவர் எடுத்துள்ளார்.
அந்த பணத்தில், 3 லட்சம் ரூபாய் ஊருக்காகவும், 3 லட்சம் ரூபாய் காலனி பகுதி பொது காரியங்களுக்காகவும் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்வராயன்மலையில் காய்ச்சப்படும் சாராயம், மூனாச்சுனை மலை அடிவாரம் வழியாக எளிதாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இந்த பாதையில் ஏற்கனவே காவல் துறை கலால் போலீசார் மறைந்திருந்து, பலரை பிடித்து வழக்குப் பதிந்துள்ளனர்.அந்த பகுதியில் போலீசார் செல்லாததால், தற்போது ஏலம் விடப்பட்ட சாராயத்தை அந்த வழியாக மல்லாபுரத்திற்கு கடத்தி வந்து விற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போலீசார் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், மல்லாபுரம் மற்றும் பாப்பாத்திமூலை கிராமங்களில் மட்டும் இதுவரை சாராய விற்பனையை தடுக்க முடியவில்லை.