பொங்கலுார்:பி.ஏ.பி., பாசன திட்டத்தில், மொத்தம் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.தண்ணீர் பற்றாக்குறை உள்ள ஆண்டுகளில் ஒன்றிரண்டு சுற்றுடன் பாசனம் நிறைவு பெற்று விடுகிறது. இதனால், விவசாயிகள் பயிர் சாகுபடியை கைவிட்டதுடன் தென்னை மரங்களை காப்பாற்ற போராடி பெரும் கடனாளியாக மாறினர்.ஆழியாறிலிருந்து ஆண்டுக்கு ஒரு டி.எம்.சி., தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டு, 930 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறைவாக தண்ணீர் இருக்கும் காலங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்படும் என்பது விவசாயிகளின் ஆதங்கம். இத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை ஒரு சில இடங்களில் போராட்டம் நடந்தது. அரசு செவிசாய்க்கவில்லை. இதனால், போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாய சங்கங்கள் தயாராகி வருகின்றன.ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை திட்ட அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும், 8ம் தேதி ஏர்முனை இளைஞர் அணி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம் ஆகியவை போராட்டம் நடத்த உள்ளன.இதேபோல, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் ஒருங்கிணைப்பாளராக உள்ள பி.ஏ.பி., பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும், 21ல் கலெக்டர் அலுவலகம் நோக்கி கோரிக்கை பேரணி நடக்க உள்ளது.இவ்வாறு விவசாய அமைப்புகள் இப்பிரச்னை தொடர்பாக, மேலும் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன.