திருப்பூர்:சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் வனச்சரகம் சார்பில் மாணவர்களுக்கு கல்லுாரி வளாகத்தில் வனத்தீ தடுப்பு பற்றிய பயிற்சி பட்டறை நடந்தது.ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். வன சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் பேசியதாவது:வீடுகளில் மற்றும் பொது இடங்களில் திடீரென தீப்பிடித்து விட்டால், என்ன செய்வது என்ற பதற்றம் அடையக்கூடாது. திரவ நெருப்பு', திட நெருப்பு', வாயு நெருப்பு', மின்சார நெருப்பு', என நான்கு விதமாக தீ உருவாகிறது. துணி, கம்பளி, சணல் சாக்கு ஆகியவற்றைக் கொண்டு, தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்கலாம்.காடுகளில் தீ எரிந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிர் பக்கங்களில் நெருப்பை உண்டாக்கினால் காட்டுத்தீ சுலபமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். மேலும் காடுகளில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது காற்றின் திசையை பார்த்து அதற்கு எதிராக நாம் சென்றால் நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.காட்டுத்தீ மிகவும் ஆபத்தானது. மரங்கள் அழிகின்றன. புவி வெப்பமயமாகிறது. வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு, இரண்டு மாதம் முன்பே தீ தடுப்பு கோடுகள் போட வேண்டும். மனிதர்கள் காடுகளுக்குள் செல்லும் போது சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு வருதல், புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகியன மூலம் காட்டுத்தீ அதிகமாக பரவும்.ஆறு மற்றும் குளங்களில் யாராவது மாட்டிக்கொண்டால் அவர்களை காப்பாற்ற அவர்களது தலைமுடியை பிடித்து துாக்கக்கூடாது. அவர்களது பின் சென்று கைகளை பிடிக்கவேண்டும். வெள்ளக்காலங்களில் தெரியாத இடங்களில் குளிக்கக்கூடாது. அவசரத்திற்கு, 101 அல்லது, 108க்கு அழைக்கலம்.இவ்வாறு, அவர் பேசினார்.தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன், தண்ணீரில் மயங்கிய நிலையில் இருக்கும் போது மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் இருக்கும் நிலையில் எப்படி எல்லாம் துாக்கி செல்வது என்று பயிற்சி மூலம் தெளிவாக கூறினார். பின் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.வனவர்கள் வெங்கடாசலம், உமா மகேஸ்வரி, பேராசிரியர்கள் அமிர்தராணி, முஸ்தாக் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில், காடுகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.