பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடி மூன்றாவது வார வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆடி மாத ஸ்பெஷலாக, கோவில்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சிறப்பு நாளாக கருதப்பட்டு, கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். நேற்று ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வரலட்சுமி விரத வழிபாட்டில் பெண்கள் பங்கேற்று, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்தனர்.சூலக்கல் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிங்கராம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், அம்மன், சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பெண்கள் பங்கேற்ற வரலட்சுமி விரத பூஜை நடைபெற்றது.ஆனைமலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில், பெருமாளுக்கு, பால், தயிர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷக ஆராதனை நடந்தது.தொடர்ந்து, பூ மாலைகள், வெட்டிவேர் மாலைகள், தங்க நிற பாசிமாலைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன், பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை, 7:00 மணிக்கு வரலட்சுமி வழிபாடு நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பெண் பக்தர்களுக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், கயிறு, பூ, பிரசாதம் வழங்கப்பட்டது.அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன் கோவில், நடுமலை சந்தன மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.