வால்பாறை:வால்பாறையில் காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வால்பாறையில் ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை துவங்கியது. கடந்த மாத இறுதியில் மழையின் தீவிரம் குறைந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை தீவிரமாக பெய்கிறது. மழையால், ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து, பெருக்கெடுத்து ஓடுகிறது. பி.ஏ.பி., திட்டத்திலுள்ள, மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளதால், அணைகளுக்கு வரும் அதிகப்படியான நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.
தொடர் மழையால், பெரும்பலான எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்றும் பணிக்கு செல்லவில்லை. பள்ளிகளுக்கு நேற்று நான்காவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது.மழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 2,734 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 525 கனஅடி தண்ணீரும், சோலையாறு அணைக்கு திறந்து விடப்பட்டது. இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 163.09 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 8,644 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், 8,754 கனஅடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது.
மண் சரிவு
காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அட்டகட்டி (22வது கொண்டைஊசி வளைவு அருகே) பகுதியில் மரம் விழுந்ததால், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆழியாறு அருகே, 9வது கொண்டைஊசி வளைவில், மண் சரிவு ஏற்பட்டு, மரம் விழுந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வன் தலைமையில், மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இப்பகுதியில், வாகனத்தில் செல்பவர்கள் மெதுவாக செல்ல வேண்டும். குறிப்பாக கனரக வாகனங்கள் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): வால்பாறை - 107, சோலையாறு - 132, மேல்நீராறு - 194, கீழ்நீராறு - 107, பரம்பிக்குளம் - 58, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 21, சர்க்கார்பதி - 57, மணக்கடவு - 8, துாணக்கடவு - 58, வேட்டைக்காரன்புதுார் - 35, பெருவாரிப்பள்ளம் - 64, நவமலை - 24, பொள்ளாச்சி - 12 என்ற அளவில் மழை பெய்தது.